Wednesday, 14 May 2008

தேர்தல் மோசடிகளுக்கு எதிராக மூன்று கட்டமாக நடவடிக்கை-ஐக்கிய தேசியக் கட்சி

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்ற மோசடிகளுக்கு எதிராக மூன்று கட்டங்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக தேர்தல் மோசடிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இரண்டாவது கட்டமாக தேர்தல் வன்முறைகள் குறித்து சர்வதேச நாடுகளுக்குத் தெளிவுபடுத்தப் போவதாகவும், மூன்றாவது கட்டமாக வன்முறை நிறைந்த தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவியரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை நேற்றுமுதலே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கிழக்கு தேர்தல் மோசடிகள் குறித்து விளக்கமளித்திருப்பதாகக் கூறினார். அடுத்தகட்டமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை மருதானையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருப்பதுடன், அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுமென திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமன்றி ஜனநாயகத்தை மதிக்கும் கட்சிகள், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முன்வர வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு இல்லை

நடைபெற்று முடிவடைந்திருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக நேற்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்தபோது ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படாமையை நேற்றையதினமும் தேர்தல்கள் ஆணையாளரிடம் எடுத்துக் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க செயற்படுமாறு அதிகாரிகளுக்குத் தான் அறிவுறுத்தியிருந்தபோதும் அதனை நிறைவேற்ற அவர்கள் தவறிவிட்டார்கள் என தயானந்த திஸ்ஸாநாயக்க தம்மிடம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்று முடிந்ததாகத் தான் கூறவில்லையெனத் தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இதற்கு ஆதாரமாக தனது அறிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் தம்மிடம் காண்பித்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்தாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தனக்கு இல்லையெனவும், தேர்ல்களை ஒத்திவைக்கும் அதிகாரம் 17வது சட்டமூலத்துக்கு அமைய நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருப்பதாகவும் தயானந்த திஸ்ஸாநாயக்க, தன்னைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட தனக்கு தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் இல்லையென தம்மிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கூறினார்.

No comments: