கிழக்கு மாகாணசபைக்கு தமிழர் ஒருவரே கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென மூன்று ஆளும் கட்சி அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கிற்கு நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற சக்திவலுத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கருத்துத் தெரிவித்திருப்பதுடன், பிள்ளையானுக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டுமென தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.
புதிதாக அமைக்கப்படவிருக்கும் கிழக்கு மாகாணசபைக்குத் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதனை 41 வீதமானவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற நீதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மூன்று இனங்களையும் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என கொழும்பு ஆங்கில பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்திருக்கும் அமைச்சர், தமிழ் மக்கள் அங்கு அடக்கப்பட்டே வந்ததால் அதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
“மீண்டும் ஒருமுறை தமிழர்களின் அரசியல் உரிமை மறுக்கப்பட்டதாக அவர்கள் நினைக்கக் கூடும்” என அமைச்சர் குறிப்பிட்டார்.
முதலமைச்சருடைய பெயரை கூறவேண்டுமென அவரும் அவசரப்படுத்தவில்லை. எனவே, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் கூடி முதலமைச்சர் யார் என்பதைத் தெரிவுசெய்யட்டும். “தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டும் என்பது உரிமை என்பதை விளங்கப்படுத்தும்” என டிலான் பெரோ கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஹிஸ்புல்லா போட்டியிட்டு, முஸ்லிம் பிரதிநிதிகள் கூடுதலாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளபோதும் அது ஹிஸ்புல்லாவின் தனியான முயற்சி அல்ல எனவும், ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையே அற்குக் காரணமெனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
“சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்தவர்கள் பலர் எம்முடன் உள்ளனர். அமைச்சர்களான அத்தாவுல்லா, ரிசாட் பதியுதீன், அமீர் அலி, மொகமட் பாயிஸ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் தமது சமூகத்தைப் பற்றிப் பேசுகின்றனர். எனினும், இறுதி நேரத்தில் எம்முடன் இணைந்துகொண்ட வேட்பாளர் ஒருவருக்கு அதனை வழங்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை” என நீதி அமைச்சர் டிலான் பெரேரா கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றிடம் மேலும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment