யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் இராணுவத்தினர் பலர் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஈ.பி.டி.பி.யின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதம் கரவெட்டிப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணிலேயே பருத்தித்துறைப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றிரவு முதல் இன்று புதன்கிழமை காலை 8 மணிவரை பருத்தித்துறைப் பகுதிக்குள் செல்வதற்கோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பேரூந்துகளோ, வேறு எந்த வாகனங்களோ செல்ல அனுமதிக்கப்படவில்லை.
காலை எட்டு மணியின் பின்னர் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தமது தொழில்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சிறிது சிறிதாக பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும், நண்பகலின் பின்னரே பேரூந்துச் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறைப் பகுதியில் பாடசாலைகள் இயங்கியபோதும் மாணவர்களின் வரவுவீதம் மிகவும் குறைவாகக் காணப்பட்டதாக யாழ் தகவல்கள் கூறுகின்றன. மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலை தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மித்த பகுதியிலிருந்து சிலர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியச் செய்திகள் கூறுகின்றன.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி.யின் சட்ட ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் பூதவுடல இறுதிக் கிரியைகளுக்காக கொழும்புக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment