Wednesday, 21 May 2008

வடமராட்சியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரால் நால்வர் கடத்தல்

யாழ். வடமராட்சியில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையினரால் நால்வர் கடத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈபிடிபி துணை இராணுவக்குழுவின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்ட கரவெட்டிப் பகுதியில் இக்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கரவெட்டி மேற்கைச் சேர்ந்த செல்லையா செல்வராசா (வயது 46) அவரது மனைவி செல்வராசா நிர்மலாதேவி (வயது 43) ஆகிய இருவரும் கடந்த 14 ஆம் நாள் கடத்தப்பட்டுள்ளனர்.

கரவெட்டி மேற்கில் உள்ள தமது வீட்டில் இருந்த போது அதிகாலை 4:45 மணியளவில் இவர்களின் வீட்டிற்குச் சென்ற முகமூடி அணிந்த சிலரே இவர்கள் இருவரையும் கடத்திச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் துன்னாலை கிழக்கு கரவெட்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் மகாராசா (வயது 34) கடந்த 14 ஆம் நாள் அவரது வீட்டில் இருந்து அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.

ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எட்வேட் ராசா வசந்தரூபன் (வயது 26) கடந்த 16 ஆம் நாள் வல்வெட்டித்துறையில் கடத்தப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு திறக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்ட போதே கடத்தப்பட்டவர்கள் குறித்த இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: