Wednesday, 28 May 2008

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னும் ஆயிரம் பிரபாகரன்களை உருவாக்க வழிகோலும் - மங்கள சமரவீர


அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் காரணமாக யுத்தத்தை ஒருநாளும் முடிவுக்குக் கொண்டு வர முடியாது எனவும் இன்னும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவாக வழிகோலும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை நாம் எல்லோரும் இணைந்து தோற்கடிக்க வேண்டும். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிடுவது போன்று திகதி குறிப்பிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகள் ஏற்படக்கூடிய காரணிகள் பற்றியே நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தக் காரணிகள் கண்டறியப்படவிட்டால் இன்னமும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவாவதை தடுக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நாம் செல்லும் பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு மங்கல சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 77 பேர் குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 475 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களில் ஏற்படும் விலையேற்றம் காரணமாக உள்நாட்டில் பொருட்களுக்கான விலையேற்றத்தை மேற்கொள்ள நேரிடுவதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. எனினும் இந்தியா, மாலைதீவு, தாய்லாந்து போன்ற நாடுகளில் 25 வீத விலையேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையில் 14 ரூபாவிற்கு இருந்த பாணின் விலை 37 – 45 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காது மேற்கொள்ளும் ஊழல் மற்றும் வீண் விரயம் காரணமாக பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக மங்கல சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலவும் ஜனநாயக முறைமை முற்றாக தற்போது சீரழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் பலக்கலைக்கழக மாணவர் ஒன்றிய தேர்தல்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மங்கல சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். ஏகாதிபத்திய ஆட்சி முறையைத் தோற்கடித்து, ஜனநாயக ரீதியிலான ஆட்சிமுறையொன்றை உருவாக்குவதற்கு நாம் அணி திரள வேண்டிய இன்றியமையாத தேவை எழுந்துள்ளதாக மங்கல சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: