Wednesday, 28 May 2008

மின்கட்டணம், புகையிரதக் கட்டணம், எரிவாயுவிலை விரைவில் அதிகரிக்கும்- ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் மின்சாரக்கட்டணம், புகையிரதக் கட்டணம், எரிவாயுவின் விலைகள் போன்றன அதிகரிக்கப்படவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள்களுக்கான வரியை 24 வீதமாக அதிகரித்திருப்பதால் மின்சாரக் கட்டணம் 45 வீதத்தாலும், ரயில் கட்டணம் மேலும் 50 வீதத்தாலும், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 125 ரூபாவாலும் விரைவில் அதிகரிக்கப்படும் என இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

இந்த வரி அதிகரிப்பின் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனைசெய்வதன் மூலம் அரசாங்கத்துக்கு 68 ரூபாய் இலாபம் கிடைக்கிறது. இந்த இலாபத்தைக் குறைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவிலையில் எரிபொருள்களின் விலைகளைக் குறைத்துக்கொடுக்க அரசாங்கத்தால் முடியுமாக உள்ளபோதும் அதனை அரசாங்கம் செய்வதில்லையென ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்துவிட்டு ஒரு வாரத்தின் பின்னர் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள்களின் விலையையும் அரசாங்கம் கூட்டியுள்ளது. நேற்றுமுதல் ஐ.ஓ.சி.நிறுவனம் ஒரு லீற்றர் டீசலின் விலையை அதிகரித்துள்ளது. சில தினங்களின் பின்னர் அரசாங்கமும் டீசலின் விலையை மேலும் 10 ரூபாவால் அதிகரிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம் மேற்கொண்ட பின்னர் நாட்டுக்குப் பெருமளவு எரிபொருள்கள் கிடைக்கப்பெறும் எனக் கூறப்பட்டது. எனினும், இதுவரை அவ்வாறான எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேலும் விஸ்தீரணப்படுத்தும் நடவடிக்கை ஈரானின் உதவியுடன் மேற்கொள்ளப்படுமெனக் கூறப்பட்டது. ஆயினும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என ரவி கருணாநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

மிஹின் எயார் விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் அரசாங்கத்துக்கு 3,200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. மிஹின் எயார், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 898 மில்லியன் ரூபா செலுத்தவேண்டியுள்ளது. விமானங்கள் எதுவும் இல்லாமல் செயற்பட்டுவரும் ஒரேயொரு விமான சேவை மிஹின் எயார் விமானசேவையே எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், மிஹின் எயார்மூலும் பொதுமக்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என மக்கள் நம்பியிருந்தபோதும் சிறந்த திட்டமிடல் இல்லாமையால் அதனை மூடவேண்டி ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையால் அமைக்கப்பட்ட 781 கைத்தொழில் நிறுவனங்களில் தற்பொழுது 125 மூடப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.

No comments: