ராஜீவ் காந்தியின் மகள் ப்ரியங்கா கடந்த மார்ச் 19-ஆம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்த்த்துப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவதைப் பார்க்கும் போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.
ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரப்பான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் - சமயங்களில், பாராளுமன்றம், சட்டமன்றங்களையும் கூட - விமர்சிக்கின்றன. ஆனால், இந்திய ஊடகம் எப்போதாவது தன்னைத்தானே விமர்சித்துக் கொள்ள முன்வந்திருக்கிறதா?
தில்லியில் ஒரு பள்ளி ஆசிரியை தன்னுடைய மாணவிகளை வைத்து நீலப்படம் எடுத்ததாக இந்தியா முழுவதும் எவ்வளவு பரபரப்பாக ஒரு செய்தி பரவியது! ஆனால், கடைசியில் அந்தச் செய்தியே ஒரு பொய் என்று அம்பலமானது. எந்தக் குற்றமும் செய்யாத அந்தப் பள்ளி ஆசிரியைக்கு ஊடகங்களிலேயே நடந்த ஒரு நீதி விசாரணையையும், அதனால் அந்தப் பெண் அடைந்திருக்கக்கூடிய துன்பங்களையும் யாரால் ஈடுகட்ட முடியும்?
இப்போதெல்லம் ஊடகங்களின் பரபரப்பு ஆர்வம் கிட்டத்தட்ட ஒருவித necrophilic நிலையையே அடைந்து கொண்டிருக்கிறதோ என்று சந்தேகப்பட வைக்கிறது.
ப்ரியங்கா, நளினி இருவருமே வரலாற்றில் படிந்திருக்கும் வன்முறை என்ற ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்கள். ப்ரியங்கா இளம் வயதில் தன் தந்தையைப் பறி கொடுத்தவர். நளினி இளம் வயதிலேயே மரண தண்டனை பெற்று, பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர். இந்த இருவரும் சந்திப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? மேற்கு நாடுகளில் இதெல்லாம் சகஜமாக நடக்கக் கூடிய விஷயங்கள். இந்தியாவில்தான் இன்னமும் பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண், கொலைக்குக் கொலை என்ற காட்டுமிராண்டித்தனமான மனோபாவத்தை சில அடிப்படைவாதிகள் (fundamentalists) தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே ஊடகங்களும் பின்பற்றுவது ஜனநாயக மரபை நோக்கிய நமது பயணத்துக்கு எவ்விதத்தில் துணை செய்வதாக இருக்க முடியும்?
இந்தப் பரபரப்புச் செய்திகளில் அடிபடும் சொற்றொடர்களைப் பார்த்தால் அதிலும் தனிப்பட்ட மனிதர்கள் குறித்த மாண்புகள் எதுவும் காப்பற்றப் படுவதாகத் தெரியவில்லை. ராஜீவ் கொலையாளியுடன் ப்ரியங்கா சந்திப்பு என்கின்றன பத்திரிகைச் செய்திகள். அப்படியானால் நளினி ராஜீவ் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?
ப்ரியங்கா நளினியைச் சந்தித்தபோது அவரிடம் அடிக்கடி "ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டது யார்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு நளினி, "கொலைத் திட்டம் குறித்து கடைசி நிமிடம் வரை எனக்கு எதுவும் தெரியாது. சிவராசன், சுபா, தனு ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தந்தையின் ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நான், அவர்கள் காட்டிய அன்புக்கு அடிமையாகி விட்டேன். ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்துக்குச் சென்ற போது, வெகு தூரத்தில் இருந்துதான் என்னால் ராஜீவ் காந்தியைக் காண முடிந்தது. கொலைக்குத் திட்டமிட்டது யார் என்பது மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனுவுக்கும், சிவராசனுக்கும் தெரிந்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பிரச்சினையில் நளினி கொலைகாரர் என்பதற்கோ, கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்கோ நமக்கு சாட்சியங்கள் எதுவும் இல்லை. சிவராசனும், தனுவும் நளினிக்கு நண்பர்கள் என்ற ஒரே ஒரு விஷயம்தான் நளினி கொலைகாரர் என்று தண்டனையளிக்கப் பட்டிருப்பதற்குக் காரணம். ஆனால் நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனையோ மரண தண்டனை. சோனியாவின் குறுக்கீட்டால்தான் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
ஆனால், பொதுவாக ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டுகள்? 14 ஆண்டுகள் என்பதே வழக்கத்தில் உள்ள நடைமுறை. நளினியோ 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
பொதுவாக, சரியான ஆதாரம் இல்லவிட்டால் தரப்படும் 'Benefit of Doubt' என்ற சலுகை கூட நளினிக்கு அளிக்கப் படவில்லை. ஒரு நிமிடம் இப்படி யோசிப்போம். நளினி கூறுவது உண்மையாக இருந்தால், இந்தப் பதினேழு ஆண்டுகளும் அவர் சிறையில் இருப்பதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அவர்களால் நளினி தனது வாழ்க்கையில் இழந்து போன இந்தப் பதினேழு ஆண்டுகளையும் அவருக்குத் திருப்பித் தர முடியுமா?
***
இந்தக் கொலை வழக்கில் நடந்த வேறொரு பிரச்சினையைப் பார்ப்போம்.
1991-இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதி மன்றத்தில் (Trial Court) 1998-இல் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது. இந்தத் தீர்ப்பு குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே வழங்கப் பட்டது. ஆனால் இந்த வாக்குமூலங்கள் பெரும்பாலும் போலீஸாரின் அச்சுறுத்தலால் அவர்களிடமிருந்து பெறப் பட்டிருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சொல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் இதை "நீதியின் படுகொலை" என்று வர்ணித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒரு பூதம் பயமுறுத்திக் கொண்டிருப்பதனாலேயே இந்தியாவில் யாரும் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிக் கருத்துச் சொல்வதில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 1999-இல் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட பென்ச் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. இதிலும் கூட ஒரு நீதிபதி (நீதிபதி தாமஸ்) நளினிக்கு மரண தண்டனை அளிப்பதற்குச் சம்மதிக்கவில்லை. இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு இணங்கவே நளினிக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. இது தவிர, மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை. இது போக மீதி 19 பேர் அவர்கள் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப் படவில்லை என்றும், விசாரணை நீதி மன்றத்தில் அவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்ட போது இவ்விஷயத்தில் பின்பற்றப் பட வேண்டிய சில அடிப்படையான நியதிகள் பின்பற்றப் படவில்லை என்றும் கூறி விடுதலை செய்யப் பட்டனர்.
இங்கே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கீழ் கோர்ட்டில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டு, பாதிக்கப் பட்டவர்கள் மேல் கோர்ட்டில் முறையீடு செய்யும்போது அங்கே அந்தத் தண்டனை ரத்து செய்யப் படுவது அல்லது சில ஆண்டுகள் குறைக்கப்படுவது என்பது வேறு; கீழ் கோர்ட்டில் ஒரே வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட 26 பேரில் வெறும் 4 பேருக்கு மட்டுமே அந்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, மீதி 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 19 பேர் ஒரேயடியாக விடுதலையே செய்யப்படுவதும் நம்முடைய நீதிமுறையையே கேள்விக்குறியாக்குகிறது. இது பற்றி நம்முடைய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்தியாவில் இது போன்று மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பெருந்தலைவர்களின் கொலை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் படும்போது அத்தீர்ப்பை Public sentiment என்பதே பெரும்பாலும் தீர்மானிப்பதாக இருந்து வருகிறது. இது இந்திய நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்குப் பாதகமாகவே முடியும். உதாரணமாக, ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சாந்தி, செல்வலட்சுமி என்ற இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தாமஸ் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறுகிறார்: சாந்தி ஜெயகுமாரின் மனைவி. (Except the fact that she accompanied her husband from Sri Lanka in September 1990 and continued to live with him in India we are unable to find any involvement for her in the conspiracy to murder Rajiv Gandhi. Learned Special Judge has considered her case, tagging it with her husband's case... We have not come across any material, apart from her living with her husband..., to suggest that she had any role in the conspiracy. It is very unfortunate that for the role played by her husband she has been sentenced to death). 1990 செப்டம்பர் மாதம் ஸ்ரீலங்காவிலிருந்து சாந்தி தன் கணவருடன் இந்தியா வந்து அவருடன் வாழ்ந்ததைத் தவிர ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதற்கு ஆதாரம் இல்லை. இவ்விஷயத்தில் அவர் கணவருக்கு இருந்த தொடர்பினால் மட்டுமே அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது."
மேலே கூறப்பட்டுள்ள தீர்ப்பு வாசகங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். இப்படிக் கற்பனை செய்து பார்ப்போம். நான் ஒரு எழுத்தாளன். என்னைப் பார்க்க இலங்கையிலிருந்து இரண்டு வாசகர்கள் வந்து, என் எழுத்து பற்றி சிலாகித்துப் பேசி என்னுடன் ஓரிருநாள் தங்கிவிட்டுச் செல்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒரு அரசியல் தலைவரைக் கொலை செய்து விடுகிறார்கள் என்பதற்காக என்னையும் அவர்களோடு சேர்த்துத் தூக்கில் போட முடியுமா, சொல்லுங்கள்? நளினி விஷயத்தில் நடந்திருப்பது அதுதான். வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட மீதி 19 பேர் விஷயத்தில் நடந்ததும் அதுதான்.
மேலும், போலீஸ் அதிகாரிகளிடம் தரப்படும் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்கிறது Indian Evidence Act 1872. காரணம், இது போன்ற வாக்குமூலங்கள் பெரும்பாலும் சித்திரவதை செய்வதன் மூலம் வாங்கப் படுவவை. ஆனால், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப் பட்டவை இவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள்தான். "இந்த வாக்குமூலங்களில் சொல்லப் பட்டவை எதையும் நாங்கள் சொல்லவில்லை; வெறும் வெள்ளைக் காகிதங்களில் எங்கள் கையொப்பம் மட்டுமே வாங்கப்பட்டன" என்று நீதி மன்றத்தில் சொன்னார்கள் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
***
"நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தணடனையாகக் குறைக்க எனது தாய் சோனியா முயற்சி எடுத்தார். கோபம், வெறுப்பு மற்றும் வன்முறை ஆகியவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனது வாழ்க்கையில் இந்த விஷயங்கள் மேலோங்க எப்போதும் நான் அனுமதித்தது இல்லை. இந்தச் சந்திப்பு எனது சொந்த விருப்பத்தின் பேரில், தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று" என்ற ப்ரியங்காவின் கூற்று நம்முடைய மதிப்புக்குரிய ஒன்று. இப்பண்பு நம்முடைய இந்திய அரசியல்வாதிகளிடம் காணக் கிடைக்காத ஒரு அந்நிய சமாச்சாரம். ஆனால், ப்ரியங்காவுக்கு இந்தக் கொலையின் உண்மையான பரிமாணங்கள் தெரியுமா? அல்லது, குறைந்தபட்சம் அவர் நீதிபதி தோமஸின் தீர்ப்பை வாசித்திருக்கிறாரா?
ராஜீவ் காந்தி கொலை எதனால் நடந்தது? அதன் வரலாற்றுப் பின்னணிகள் என்ன?
1987-ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையை ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பியதற்கு அவர் கொடுத்த மிக அதிக பட்ச விலை அவருடைய உயிர். தாத்தா பாட்டிகளையே பிரதம மந்திரிகளாகப் பார்த்து வந்த நமக்குக் கிடைத்த ஒரே இளைய பிரதமராக இருந்தார் ராஜீவ். உலகின் எந்த நாட்டையும் விட தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா முன்னணியில் நிற்பதற்கும் அவரே காரணம். ஆனால், அவர் செய்த மிகப் பெரிய தவறு அவருடைய உயிரை பலி வாங்கி விட்டது. 1987 இலிருந்து 1990 வரை இலங்கையிலிருந்த இந்திய அமைதிப் படையில் சுமார் 2000 பேர் இறந்திருப்பார்கள். இதேபோல் பல மடங்கு இழப்பு ஈழத் தமிழர்களுக்கு இந்திய அமைதிப் படையால் ஏற்பட்டது.
"இந்திய அமைதிப் படையால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படக் கூடாது என்றும், அதற்காக எவ்வித தியாகத்தை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்திய அமைதிப் படைக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. இது குறித்து மிகக் கடுமையான ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்." இது அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 9.11.1987 அன்று பாராளுமன்றத்தில் பேசியது. ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் 8.2.1989 அன்று நடந்தது என்ன தெரியுமா?
லண்டன் ·பினன்ஷியல் டைம்ஸ் பத்திரிகையில் 17.8.1989 அன்று ஒரு நிருபர் எழுதியிருப்பது இது:
"வல்வெட்டித்துறையில் இந்திய சிப்பாய்கள் 6 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப் பட்டனர். அதனால் கோபமடந்த இந்தியச் சிப்பாய்கள் அந்த ஊரில் கண்ணில் தென்பட்ட அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றார்கள். கடைகளையும் வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள். மொத்தம் 120 வீடுகள் தீக்கிரையாயின. 52 உடல்கள் கிடைத்தன. ஊரின் மொத்த ஜனத்தொகையான 15000 பேரில் பாதிப்பேர் ஊரை விட்டு அகதிகளாகக் கிளம்பினர்."
24.8.1989 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ரீட்டா செபஸ்தியன் என்பவரும் இதே சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். 'இந்திய மைலாய்' என்று வர்ணிக்கப்பட்டது இச்சம்பவம். இது வெறும் ஒரு நாள் சம்பவம். இதுபோல் 1987-90 என்ற மூன்று ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான துயர சம்பவங்கள் நடந்தன. சுமார் 3000 தமிழர்கள் இந்திய அமைதிபடையால் கொல்லப் பட்டனர். துயரம், வெறும் உயிரிழப்போடு மட்டும் போகவில்லை; பல நூறு தமிழ்ப் பெண்கள் வன்கலவி செய்யப்பட்டனர். அப்போதே தமிழ்நாட்டில் மிகப் பரவலாக ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து பற்றி பொது மக்களிடையே பேசிக் கொள்ளப்பட்டது. ஏனென்றால், தமிழர்கள் என்று மட்டும் அல்ல, எந்த ஒரு இனமுமே தங்கள் பெண்களின் கண்ணியத்தைத் தங்கள் உயிரையும் விட உயர்ந்ததாகக் கருதும் பண்பைக் கொண்டதுதான். இந்திய அமைதிப் படையினரால் நேர்ந்த உயிரிழப்புகள் பற்றியும், தங்கள் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் நான் எத்தனையோ நூற்றுக்கனக்கான கண்ணீர்க் கதைகளைக் கேட்டிருக்கிறேன். மேலும், ஈழத் தமிழர்களால் இலங்கை ராணுவத்தினரின் கொடுமைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இந்தியா அவர்களுடைய நேச நாடு. அவர்களுடன் ரத்த உறவு கொண்ட தமிழர்கள் வாழும் நாடு. இந்தியா தங்களுடைய இனப் போராட்டத்துக்கும், ஈழ விடுதலைக்கும் தோள் கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் அவர்கள். அப்படிப் பட்ட ஒரு தேசத்திலிருந்து வந்த படை தங்களையே கொன்று குவிப்பதையும், தங்கள் பெண்கள் வன்கலவி செய்யப் படுவதையும் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தான் தனு போன்ற மனித வெடிகுண்டுகளாக மாறினர். இந்த வரலாறு எல்லாம் இன்று நளினி என்ற பெண்ணிடம் சென்று "என் அப்பாவைக் கொல்வதற்குப் பதிலாக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாமே? என் அப்பா ரொம்ப நல்லவர்; பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கவே மாட்டார்" என்று கண்கலங்கியபடி கேட்கும் ப்ரியங்காவுக்குத் தெரியுமா?
இங்கே மற்றொரு பிரச்சினையையும் நாம் கவனிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு ராணுவமாக இருந்தாலும் சரி, ராணுவத்தினரின் உளவியல் என்பது தனிவகைத்தானது. ஒரு குடும்ப உறுப்பினர்களைப் போலவே இயங்கக் கூடியது அவர்களின் உளவியல். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தங்களைப் பற்றிப் பேசியதோ, தங்கள் நன்னடத்தை பற்றி அவர் கொடுத்த சான்றிதழ் பற்றியோ எதுவும் தெரியாது. அவர்கள் இருப்பது ஒரு அந்நிய பூமியில். எதிரிக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் தங்கள் தேசத்தைக் காப்பற்றுவதற்காக அங்கே வந்திருக்கவில்லை. அரசியல் திருப்பங்களில் பலி கொடுக்கப் படுவதற்காக அனுப்பப் பட்டிருக்கும் காலாட்படை சதுரங்கக் காய்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்கள், தங்களில் சிலர் யாரோ முகம் தெரியாதவர்களால் கொல்லப் படும்போது அப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள். அதுதான் எதிர்பார்க்கக் கூடியதுமாகும். எனவே, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியது என்னவென்றால், இந்திய அமைதிப் படையே இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கக் கூடாது என்பதுதான்.
இவ்வளவு பெரிய துயர சரித்திரத்தைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நமது பத்திரிகைகள் இன்று 'பிரியங்காவும் அழுதார்; அவரைப் பார்த்து விட்டு நளினியும் அழுதார்' என்று தொலைக்காட்சி சீரியலுக்கு கதை வசனம் எழுதுபர்வகளாக மாறி விட்டது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாகும்!
***
இந்தக் கட்டுரை கலா கௌமுதியில் சென்ற வாரம் வெளி வந்தது. தமிழ்ப் பத்திரிகை எதிலும் வெளி வரவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
1 comment:
Congress is nothing but,Jameen(Landlord);they can go to any extend;but,people should close their mouth&b...t....t...s.to support Congress!
wait:There will be "KUMMANKOOTTHU" from Karnataka people!
Post a Comment