11 வருடங்களாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. காலை 10.37 க்கு கூடிய சுப வேளையில் இந்த ஆலை திறந்துவைக்கப்படுகின்றது. வாழைச்சேனை கடதாசி ஆலை திறக்கப்படுவதன் மூலம் இலங்கையின் கடதாசி தேவையை 10 முதல் 15 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் என கடதாசி ஆலையின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்தார்.
1997ம் ஆண்டு மூடப்பட்ட இந்த கடதாசி ஆலை, தற்போது கிழக்கின் உதயம் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக திறந்துவைக்கப்படுகிறது.
இந்த கடதாசி ஆலையின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாளாந்தம் சுமார் 10 டொன் கடதாசி உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பத்தில் மாதத்திற்கு 300 டொண் கடதாசி உற்பத்தி செய்ய முடியும். அத்துடன் இந்த உற்பத்தியை மூன்று மாதத்தில், மாதாந்தம் தலா 500 டொன்னாக அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.
மூவாயிரம் ஊழியர்களைக் கொண்டு இயங்கிய இந்த நிறுவனம் பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஊழியர்கள் கட்டம் கட்டமாக நீக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே இருப்பதாகவும், தற்போது இரண்டு இயந்திரங்கள் மாத்திரமே உபயோகிக்கக் கூடிய நிலையில் உள்ளதாகவும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறி உள்ளார்.
வடகிழக்கில் இயங்கிய இவ்வாறான பெரும் உற்பத்தி சாலைகள் யுத்தத்தை காரணம் காட்டி மூடப்பட்டன. தென்னாசியாவின் மிகப் பெரிய சீமந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான, யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமந்து தொழிற்சாலை, அதே இடத்தில் இயங்கிய தனியார் சீமந்துத் தொழிற்சாலை, காரைநகர் சீனோர் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வன்னியில் பரவலாக உற்பத்திகளை மேற்கொண்ட ஓடு மற்றும் மட்பாணடத் தொழிற்சாலைகள் என தமிழ் பிரதேசங்களின் பொருளாதாரம் திட்டமிட்டு மூடப்பட்டும் சசீரளிக்கப்பட்டும் உள்ளன.
இந்தத் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்த 15 ஆயிரம் வரையிலான தொழிலாழர்களின் தொழில் இல்லாது செய்யப்பட்டன. இதன் மூலம் 15 ஆயிரம் குடும்பங்கள் வீதிக்கு கொண்டுவரப்பட்டன. மறுபுறம் இந்தத் தொழிற்சாலைகளை இயக்கிய மனித வளங்கள் நாட்டை விட்டு புலம்பெயர்க்கப்பட்டன.
இன்று வடகிழக்கு தமிழ் பிரதேசங்கள் 50 வருடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டு விட்டன. ஆனால் இன்று மீண்டும் ஆட்சியாளரின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ், தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக கிழக்கு உதயத்தில்; வாழைச்சேனை காகித உற்பத்திச்சாலை திறக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில் 3 ஆயிரத்திற்கு மேலான தொழிலாழர்களை வேலை இழக்கச் செய்து 240 பேர் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் புதிதாக தொழில் கொள்ளப்படுபவர்கள் யாராக இருக்கப் போகிறார்கள் என்பது இங்கு முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
முன்னர் இந்தத் தொழிற்சாலையில் 80 வீதமானவர்கள் கிழக்கைச் சேர்ந்த தமிழபேசும் மக்களாக இருந்தனர். ஆனால் தற்போது காடதாசிக் கூட்டுத் தாபனத்தின் உயர் மட்ட அதிகாரிகளாக பெரும்பான்மையினத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏற்கனவே கிழக்கை மீட்பது என்ற பெயரில் பறித்தெடுக்கப்பட்ட பிரதேசங்களின் வீதிகள் பல சிங்கள மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல பிரதேசங்கள் சிங்களச் சொற்களால் அழைக்கப்படுகின்றன.
உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. கிழக்கு மண்ணில் இருந்து திடீர் திடீரென பௌத்த புராதசின்னங்கள் மேற்கிழம்புகின்றன. முஸ்லீம்கள் அராபியாவில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என ஹெல உறுமய தெரிவித்து விட்டது.
திருமலையில் அனல் மின்னிலையம் என்ற வடிவில் அபகரிக்கப்பட்ட சம்பூர்- பறிபோன பூமியாகிவிட்டது. இன்னும் மிச்சம் என்ன இருக்கிறது வாழைச்சேனையும் காகிதத் தொழிற்சாலையாகி பின்னர் கெசல் வத்தையாக (கெசல் வத்தை என்பது சிங்களத்தில் வாழைத் தோட்டம்) மாறும் காலம் தொலைவில் இல்லை.
thank you:ulakaththamildaily
Tuesday, 6 May 2008
வாழைச் சேனையும் - கெசல் வத்தையாகுமா? செய்தி ஆய்வு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment