Thursday, 15 May 2008

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து சிறீலங்காவை வெளியேற்றுக - தென்னாபிக்கப் பேராயர்

சிறிலங்காவை வெளியேற்றுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் தென்னாபிரிக்க பேராயர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, இன்று பிரித்தானியாவில் வெளிவந்திருக்கும், ”த கார்டியன்” (Desmond tutu) நாளேட்டில் கருத்துப் பத்தி ஒன்றை எழுதியிருக்கும், தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மன்ட் ரூட்ரூ (Desmond tutu), மனிதவதை, காணாமல் போகடித்தல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றும் சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பதற்கான தகுதியை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சொந்த மக்களை வதைகளுக்கு உட்படுத்தியும், கடத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் ஒரு நாடு, உலகின் முதன்மை மனித உரிமைக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் முற்படுகின்றது.

மனித உரிமை பேரவையில் சிறீலங்கா அரசாங்கம் இணைவதை தடுப்பது, மனித உரிமை
மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , உலக அரசாங்கங்கள் புரியும் உதவியாக அமையும். இதன்மூலம், மனித உரிமை விழுமியங்களுக்கான கௌரவத்தை, ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் வழங்க வேண்டும். மனித உரிமைகள் பேரவையில் இருந்து சிறீலங்கா அரசாங்கம் விரட்டப்படுவது, மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு மட்டுமன்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ஏனைய அரசாங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும். மனித உரிமை விழுமியங்களை பேணப்போவதாக வழங்கிய உறுதிமொழியை, சிறீலங்கா அரசாங்கம் மதிக்கத் தவறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியவாறு, லூயிஸ் ஆர்பர், ஜோன் ஹோமஸ் போன்றவர்களைப் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்றும், சிறீலங்கா அரசாங்கம் வர்ணித்துள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட பாரதூரமான மனித உரிமை
மீறல்களை, திட்டமிட்ட வகையில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகள் அரங்கேற்றுகின்றன. யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாளும் யுக்திகளுக்காக, இவ்வாறான பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. இவ்வாறு, தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மன்ட் ரூட்ரூ மேலும் தெரிவித்துள்ளார்.
Thank you:pathivu

No comments: