Thursday, 22 May 2008

இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுப்பதில் சீனர்களிடமிருந்து பாடத்தை கற்றுக் கொண்டிருக்கும் இந்திய உயர்மட்டத்தினர்

மருதமுத்து

இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இலங்கையுடனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக்கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கி வரும் இந்திய அரசு, தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம்.

2006, செப்டம்பரில் திருகோணமலையில் இலங்கைப் படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நடந்தேறி 2 மாதங்கள் கழிவதற்குள்ளாகவே) இந்திய அரசும் இலங்கை அரசும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி இந்தியா ஒரு பெரும் அனல்மின் நிலையத்தை இலங்கையில் நிறுவும். இத்திட்டத்தின் முதலீட்டு மதிப்பு 500 மில்லியன் டொலர்கள். அதாவது சற்றேற 2000 கோடி ரூபா. இந்த மின் நிலையம் 500 மெகாவாட் திறன் கொண்டது. இது இலங்கையின் மொத்த மின்திறனை 20 சதமானம் அதிகரிக்கச் செய்யும். அந்நாட்டின் உள்கட்டமைப்பை மிகப்பெரிய அளவுக்கு மேம்படுத்தும். மேலும் இலங்கைக்கும் (அதன் பெருமுதலாளிகளுக்கும்), இந்தியாவுக்கும் (இங்குள்ள அகில இந்திய ஆதிக்கச் சக்திகளுக்கும்) இடையிலான பொருளாதார உறவுகள் கணிசமாகப் பெருகி வளரும். இதைப் பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளது "இந்து"நாளிதழ்.

இப்பெரிய மின்நிலையத்தை எங்கே நிறுவுவது என்று பேரம் பேசப்பட்டு இறுதியாக இப்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்குத் தெற்கில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினரால் விரட்டியடிக்கப்பட்டு வாழ்விடங்களை இழந்த பகுதியில்தான் இந்த நிலையத்தை நிறுவப்போகிறார்கள் இந்திய - சிங்களப் பங்காளிகள்.

இத்திட்டத்தைத் தவிர இன்னொரு மாபெரும் முயற்சியிலும் இந்திய அரசு வேகம் காட்டி வருகிறது. இந்தியாவின் மின்கம்பி வலையமைப்பையும் இலங்கையின் வலையமைப்பையும் ஒன்றிணைக்கத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதன்படி கடலடியில் மின்வடங்கள் போடப்பட்டு இராமேஸ்வரமும் தலைமன்னாரும் இணைக்கப்படப்போகின்றன. இத்திட்டத்துக்கான முன் சாத்தியப்பாடு அறிக்கை வெளியாகியுள்ளது. 42 மாத காலத்துக்குள் இது நிறைவேற்றப்பட்டு செயல்படத் தொடங்கும் என இவ்வறிக்கை கூறுகிறது. இத்திட்டத்துக்கான செலவு மதிப்பீடு ரூ.2293. கோடி, அண்மையில் இந்திய வணிகத்துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டுத் திரும்பிய பிறகு இத்திட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் உட்பொருள் என்ன?

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் ஒரு சில அகங்காரமிக்க அறிவுஜீவி, அதிகாரிகளின் ஆலோசனைக்கு அடிபணிந்து இந்திய அரசு இலங்கை அரசோடு மிக நெருக்கமாக இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளது. சிங்களப் பேரின வாதிகளின் கோரிக்கையை ஏற்க முன்வந்துள்ளது. அவர்களின் நிலைப்பாடும், கோரிக்கையும் இதுதான்.

"எங்கள் நாடு சிங்களவருக்கேயுரியது. தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகளாகக் கீழடங்கிக் கிடக்க வேண்டும்.அவர்களை ஒடுக்க எந்த அக்கிரமமும் செய்வோம். இந்தியா எதிர்க்கக் கூடாது. கண்காணிக்க வரும் மனித உரிமைக் குழுவினரைக்கூட விரட்டியடிப்போம். எதையும் யாரும் கேட்கக்கூடாது. அதுமட்டுமல்ல, தமிழர்களை ஒடுக்குவதற்கான இராணுவ உதவிகளை இந்தியா தாராளமாகச் செய்ய வேண்டும். அதேநேரத்தில் இனவாதப் போரால் எங்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் வகையில் எங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவவேண்டும். எங்களில் ஒரு சிலர் இந்திய அம்பானிபோல உலகமகா முதலாளிகளாக வளர வாய்ப்பளிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் நாங்கள் இந்தியாவின் மண்டல மேலாதிக்கத்துக்கு இளநிலைப் பங்காளியாகத் துணைநிற்போம். இப்பூமண்டலப் பகுதியில் உங்களின் மாபெரும் போட்டியாளனாகவும், வட்டார வல்லாதிக்கச் சக்தியாகவும் வளர்ந்து வரும் சீனத்தை கேந்திரத் துறைமுகமான திருகோணமலையில் கால்பதிக்காமல் பார்த்துக் கொள்வோம்."

சீனாவின் பொருளாதார, இராணுவ வளர்ச்சி வரலாறு காணாத ஒன்று. இந்திய வெளியுறவுத்துறை அறிவுப் பிரபுக்கள் வெளியில் சுமுகமாகப் பேசினாலும் உள்ளே சீனத்திடம் அச்சமும், பொறாமையும் கொண்டவர்களாக உள்ளனர். இவர்கள் யாரும் நேரு,நாசர் காலத்திய ஆதிக்க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டவர்கள் அல்ல. இந்திய அரசும் கூட சோசலிஷத்தையும் மதச்சார்பின்மையையும் கைவிட்டதுபோல் சர்வதேசப் பிரச்சினைகளில் மேலாதிக்க எதிர்ப்புக் கொள்கையும் கைவிட்டுவிட்டது.

இந்நிலையில், இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுப்பதில் இந்திய உயர்மட்டத்தினர் சீனர்களிடமிருந்து பாடம் கற்றுள்ளனர்.

சீனர்களின் அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக இரண்டைப் பார்க்கலாம்.

ஆபிரிக்கா, இயற்கை வளங்கள் கொழிக்கும் கண்டம். தொழில்துறைக்கு தேவையான பல்வேறு கனிமங்கள் (எண்ணெய் எரிபொருள் உட்பட) அங்கே ஏராளமாகக் கிடைக்கிறது. படிப்பின்மை, பஞ்சம், எய்ட்ஸ் போன்ற கொடு நோய்கள், போர்கள், இனக்கொலைகள், நீக்கமற நிறைந்த ஊழல் இப்படிச் சின்னாபின்னமாகக் கிடக்கிறது ஆபிரிக்கா. அங்குள்ள சூடானில் கடுமையான உள்மோதல், தார்புர் என்ற பகுதி மக்கள் இன அடிப்படையில் உரிமைகோரிப் போராடியதால் சூடானின் ஆதிக்கவாதிகள் நம்புவதற்கியலாத அக்கிரமங்களை அரங்கேற்றினர். இனப்படுகொலை நிகழ்த்தினர். அது இன்றும் தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்று பி.பி.சி.கூறுகிறது. (22-04-08). இலட்சக் கணக்கானவர்கள் சொந்த நாட்டிலும்,வெளிநாடுகளிலும் அகதிகளாகத் தவிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான சூடான் எனும் ஆதிக்க அரசோடு மிகநெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. காரணம் அந்த நாட்டிலுள்ள எண்ணெய் வளம் சீனாவின் பெரு முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. எனவே உலகநாடுகளின் கண்டனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் சீனா சூடானுக்குப் பொருளாதார உதவியை நல்குகிறது. ஆயுதங்களை வாரி வழங்குகிறது. பங்காளியாகச் செயல்படுகிறது. "எங்களுக்குத் தேவை எண்ணெய். யாரும் யாரையும் கொல்லட்டுமே! எண்ணெய் எடுக்க வேண்டுமானால் நாட்டில் அமைதி தேவை. அது மயான அமைதியாக இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை" என்று தான் சீனாவின் போக்கு அமைந்துள்ளது.

இன்னொரு எடுத்துக்காட்டுக் காங்கோ ஜனநாயகக் குடியரசு பற்றியது. இந்த ஆபிரிக்க நாட்டிலும் சீனா நுழைந்துள்ளது. இங்கு பூமிக்கடியில் செம்பும், கோபால்ட் எனும் கனிமமும் ஏராளமாக உள்ளன. இவை சீனப் பெரு முதலாளிகளுக்கு அவசியத் தேவை. இவற்றைச் சுரங்கம் அமைத்து வெட்டியெடுக்க சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி அந்நாட்டின் பல நிலப்பகுதிகள் சீனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (முன்னொரு காலத்தில் சீனாவுக்குள் மேற்கத்திய கம்பெனிகள் இப்படி இடங்களை வளைத்துப்போட்டுச் சுரண்டியது வரலாற்றுச் செய்தி). கனிமங்களை சீனா கொண்டு செல்லும் எனில் காங்கோ நாட்டுக்கு என்ன கிடைக்கும்? உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தித் தருவதாக சீனா ஒப்பந்தம் போட்டிருக்கிறது. (இந்திய- சிங்கள மின்துறைத் திட்டங்களும் இதே வகைதான்). காங்கோவுக்காக சாலைகளையும் இரயில்பாதைகளையும் சீனா நிர்மாணித்துத் தரும். (அவற்றைத் தன் தேவைகளுக்காக சீனா பயன்படுத்திக் கொள்ளவும் செய்யும்.) இதே நேரத்தில் காங்கோ நதிக்கு குறுக்கே உலகிலேயே பெரிய அணை ஒன்றைக் கட்டி மின்சாரம் உற்பத்தி செய்யும் உலகமா திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. உலகமயமாக்கல் கொள்கைக்கேற்ப பல பெரும் உலக நிறுவனங்கள் ஒன்றிணைந்து முதல்போட்டு இதை நிறுவியிருக்கிறார்கள். இதன் மூலம் ஆபிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏகபோக நிறுவனங்களுக்கும், சுரங்கப் பணி நிறுவனங்களுக்கும் மின்சாரம் தங்குதடையின்றிக் கிடைக்கும். சீனப் பெருமுதலாளிகளின் கனிமச் சுரங்கங்களுக்கும் இது பெரிய ஆதாயமாக அமையும். ஆனால் ஆபிரிக்காவின் அரைப்பிணங்களான குடிகளுக்கு இந்த மின்சாரம் எட்டாக்கனிதான். கஞ்சிக்கே வழியில்லை. மின் கட்டணத்துக்கு எங்கே போவது?

ஒரு மிக முக்கியமான உண்மையை இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும். சீனா கனிமம் தோண்டியெடுக்கவிருக்கும் காங்கோ நாட்டில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு குலக் குழுவினர் வாழ்கிறார்கள். இவர்களுக்கிடையில் முரண்பாடுகளும் மோதலும் உள்ளன. உள்நாட்டுப் போர் காரணமாகப் பல இலட்சம் உயிர்கள் பலியாகியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உள்நாட்டுப் போர் மூளலாம். அரசு எவ்வளவு அக்கிரமமான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். ஆனால் பல்லாயிரம் கோடி டொலர்களை முதலீடு செய்யும் சீனா அப்போது நியாயத்தின் பக்கம் நிற்கப்போவதில்லை. டொலரின் பக்கம்தான் நிற்கும். அதைத்தான் டெங்சியோ பிங் நவ சீனத்துக்குக் கற்பித்துள்ளார்.

இந்தப் பாடத்தைத்தான் இந்திய அரசு கற்றுக்கொண்டு இன்று இலங்கையில் நடைமுறைப்படுத்த முனைகிறது." திபெத்தில் நீங்கள் எந்த அடுக்குமுறை வேண்டுமானாலும் செய்யுங்கள். சூடானில் அரசின் அடக்குமுறைக்குத் தோள் கொடுங்கள். நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம். அதுபோலவே இலங்கையில் நாங்களும் நடந்து கொள்கிறோம். சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கட்டும், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக் கட்டும். நாங்கள் அதற்குத் துணை நிற்போம். மௌனமாக எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்", என்கிற செய்தியை இந்திய அரசு சீனாவுக்கு விடுத்துள்ளது.

இதற்கொரு குறியீடாக ஒலிம்பிக் ஜோதியைச் சுற்றி இந்திய காவல் படைகளை சீனச் சுவர்போல் நிற்கவைத்துக்காட்டினர். அறவழியில் எதிர்ப்பு காட்ட ஒருவருக்குக்கூட அனுமதி தரவில்லை காந்திநாடு.

சீனமும் இதை மனமுவந்து பாராட்டியுள்ளது.

ஆனால், இதனாலெல்லாம் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. மேலும் தீவிரமடையத்தான் செய்யும். அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையில் நின்று கொண்டு இருவரையும் மாற்றி மாற்றி மகிழ்வித்துக்கொண்டே தமது நலன்களைப் பேணிக்கொள்ளலாம் என்று இந்தி ஆளும் பிரிவினர் நினைப்பது வரலாற்று அறியாமையைக் காட்டுகிறது. பேராசை அறிவாளியின் கண்ணைக்கூட மறைக்கும் என்பதையும் காட்டுகிறது.

வெறும் இராஜதந்திரத்தால் மட்டும் நீடித்த வெற்றி கிடைத்துவிடாது. மக்களைச் சார்ந்து, கோட்பாட்டு ரீதியான முடிவுகளை எடுப்பதுதான் நல்ல விளைவைத் தரும். அதற்கு நேரு காலத்திய உலகப் பார்வைக்குத் திரும்ப வேண்டும். அதை மேலும் செழுமைப்படுத்தவும் வேண்டும்.

இவ்வாறு செய்வதற்குப் பதில் இந்திய அரசு இப்போது மேற்கொண்டிருக்கும் பாதையில் தொடர்ந்து பயணிக்குமானால் என்ன நடக்கும்?

இந்தியாவின் பொருளாதார உதவி பெருமளவு கிடைத்துவிடுமானால் சிங்களவரின் ஆணவப்போக்கு மேலும் வலிமைபெறும். அதிகரிக்கும் செல்வ வளங்களைப் பயன்படுத்தி மேலும் மேலும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து தமிழர்களை முற்றாக நசுக்க முனைவார்கள். விளைவாக போர் மேலும் உக்கிரமடையும். (இஸ்ரேலுக்கு அமெரிக்கப் பின்பலம் உள்ளதனால் இப்படிப்பட்ட விளைவே ஏற்பட்டுள்ளது) . இலங்கைத் தீவில் எவரும் எந்த மூலையிலும் அமைதியாக வாழ்ந்துவிட முடியாத நிலைதான் ஏற்படும். அனல்மின் நிலையத்து இந்திய அதிகாரிகளுக்கும் கூட இந்த நிலை ஏற்படலாம்.

இரண்டாவதாக இந்திய- சிங்களப் பெரு முதலாளிகளின் கூட்டு முயற்சி காரணமாகவும் உலகமயமாக்கல், திறந்த சந்தை ஆகிய காரணமாகவும் இலங்கையிலும் இந்தியாவைப்போல சமூக ஏற்றத்தாழ்வு பெருமளவுக்கு அதிகரித்துவிடும். விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்கள் பெருகும். சிங்களவர் மத்தியிலேயே பெரும் பகைமையுணர்ச்சி ஏற்படும். அதைச் சமாளிப்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள ஆத்திரத்தையெல்லாம் தமிழர் பக்கம் திசை திருப்பிவிடவும் செய்வார்கள்.

இறுதியாக ஒன்று. உலகு இப்போது உணவுப் பற்றாக்குறை என்ற விளிம்பில் தொத்திக் கொண்டு தொங்குகிறது? இது பல நாடுகளில் பஞ்ச நிலையாக உருவெடுக்கும் . ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பின் இயக்குனர் கூறுகிறார்;

"உலகம் முழுவதையும் ஒரு சத்தமில்லாத கடல்கோள் தாக்கியிருக்கிறது". "இதனால் பல நாடுகளின் பாதுகாப்பு சிதறும் என்றும் கலவரங்கள் வெடிக்கும் என்றும் அவர் சொல்லியுள்ளார். ஐ.நா.சபையின் கழகத்தின் ஆணையாராக இருப்பவரும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

(தொடரும்)

No comments: