
மட்டு காத்தான்குடியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டை அடுத்து இடம்பெற்ற வேறுவேறு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. 11 பேர் காயமடைந்து உள்ளனர்.
பதட்ட நிலையைக் கட்டுப்படுத்த காத்தன்குடியில் இன்று பிற்பகல் 2:00 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நெருக்கடி நிலைகளுக்கிடையே காத்தான்குடித் தொகுதி வேட்பாளர் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சபையின் சுகாதாரப் பிரிவு மற்றும் முஸ்லீம் விவகார அமைச்சராகப் பதவியேற்று உள்ளார்.
யார் இந்த சாந்தன் ஒரு சிறிய பார்வை?
விசேட அதிரடிப்படையில் இருந்து செயற்பட்ட அரச உளவுத்துறை அதிகாரியும், தற்போது கருணா குழுவிற்குள் இருந்து செயற்படும் ஆரயம்பதி பொறுப்பாளரும், முன்னைநாள் ராசிக் குழு பிரதி பிராந்திய பொறுப்பாளரும், புளொட் மோகன் குழுவின் முக்கியஸ்தராகவும் இருந்த சசி அல்லது சாந்தன் இண்று சுட்டுக்கொல்லபட்டார். சும்மார் 18 வருடமாக கிழக்கில் பல கொலைகளை சாதுரியமாக நடாத்தி வந்த இவருடைய மனைவி ஆரயம்பதி பகுதி பிரதேச சபை உறுப்பினராக தற்போது தெரிவு செய்யபட்டிருந்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்கள் இனரீதியாக பிளவுபட்டு தமிழரா - முஸ்லீமா முதலமைச்சர் என்ற போட்டியில் இறங்கியதன் பாரதுரமான விளைவை காத்தன்குடி சம்பவம் இன்று வெளிக்காட்டி உள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கு முன் இன்றுள்ள மிக முக்கிய பிரச்சினை இனங்களிடையேயான ஐக்கியத்தை நிலைநாட்டுவது. ஆயுதங்களுடன் மட்டுமே பேசிய ஒரு ரிஎம்விபி யால் அந்த ஆயுதங்களை ஒரு புறம்வைத்துவிட்டு அரசியல் ரீதியாக செயற்பட முடியுமா என்பதற்கான பரீட்சைக்களமாக காத்தான்குடி மாறியுள்ளது.
பழிக்கு பழி வாங்கும் தாக்குதல்களை கிழக்கு மாகாண சபையை ஆளும் கட்சியே மேற்கொள்வது கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும்.
முதலமைசர் கிழக்கு விஜயம் - கிழக்கில் பதட்டம் - 5 படுகொலை:
கிழக்கு மாகாணத்தை சகல வளங்களும் கொண்ட நவீன மாகாணமாக அபிவிருத்தி செய்வதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் சபீட்சத்தைக் கொண்டு வருவதற்கும் தான் பாடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் முதலமைச்சராகப் பதவியேற்று மட்டக்களப்புக்கு முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு அவரின் ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பினை வழங்கி இருந்தனர். ஆனால் மட்டக்களப்பில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் காத்தன்குடியில் முஸ்லீம்களுக்கும் ரிஎம்விபி க்கும் இடையில் ஏற்பட்ட பதட்டம் இன்று (மே 22) நான்கு படுகொலைகளில் முடிவடைந்து உள்ளது.
இன்று (மே 22) காலை ரிஎம்விபி ஆதரவாளர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்கும் வகையில் இன்று மதியம் இரு முஸ்லீம்களை ரிஎம்விபி யினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு மார்ச்சில் உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரே நாளில் கூடுதலானவர்கள் கொல்லப்பட்டு உள்ளது இதுவே முதற் தடவையாகும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற போட்டி ஏற்படுத்திய பதட்டம் இவ்வாறான ஒரு வன்முறைக்கே வித்திடும் என்ற அச்சம் நிலவியிருந்தது. அது இப்போது உறுதியாகி உள்ளது.
மட்டக்களப்பில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுகளில் முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், ”கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக மிகவும் கஸ்டத்தில் அகதிவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அவர்களை சொந்த மண்ணில் மீள குடியேற்ற வேண்டும். போக்குவரத்து வசதிகள் உட்பட அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் கடந்தகால செயற்பாடுகளினால் சேதமுற்று நலிவடைந்துள்ளது. இதை நாம் சகல வளமும் நிறைந்த சுபீட்சமான மாகாணமாக கட்டியெழுப்ப வேண்டும். அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அரசாங்கமும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் எமது மாவட்டத்தை ஜனநாயக ரீதியில் தமக்கான தேவைகளை படிப்படியாக எம்மால் நிறைவேற்ற முடியும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை எமக்களித்து தெரிவு செய்தார்கள். அதற்காக நாம் நன்றி பாராட்டுகிறோம். எமது பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தொழிலில்லாதப் பிரச்சினைகளுக்கும் முடிவு செய்வோம்” என்றார்.
”கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக் கூறும் விதத்தில் நடந்துகொள்வேன்” என்றும் ”தற்போதுள்ள பிரதான பணி கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக மிகவும் கஸ்டத்தின் மத்தியில் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீளக்குடியமர்த்துவதாகும்.” என்றும் முதலமைச்சர் நியமனம் மற்றும் அது தொடர்பிலான கடமைப் பொறுப்புகள் குறித்து கேட்டபோது முதலமைச்சர் சந்திரகாந்தன் தினகரன் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் முதலமைச்சர் சந்திரகாந்தனின் வருகை மிகவும் பதட்டத்தையும் இனமுறுகலையும் ஏற்படுத்தி இருப்பதால் எதிர்காலத்தில் தமிழ் - முஸ்லீம் உறவுகள் எவ்வாறு பலப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே கிழக்கின் எதிர்காலம் தங்கியுள்ளது. காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதட்டம் தொடர்பாக முதலமைச்சர் சந்திர காந்தனும் முஸ்லீம்காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் தொலைபேசியில் உரையாடி உள்ளதாக தெரியவருகிறது. இந்த உரையாடல் எவ்வாறு இரு சமூகங்களிடையேயான பதட்டத்தை தணிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்


No comments:
Post a Comment