கருணா என்று அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனில் உள்ள வூம்குரொப்ற் சிறையிலிருந்து விடுதலையாக உள்துறை அமைச்சின் குடிவரவு கட்டுப்பாட்டுப் பிரிவினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் தெரிவிக்கிறது.
கேணல் கருணா அரசியல் தஞ்சம் கோராத பட்சத்தில் விரைவில் இலங்கைக்கு திரும்பலாம் என்று தெரியவருகிறது. இவர்மீதான குற்றங்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமையல் பிரித்தானிய பொலிசார் கேணல் கருணா மீது குற்றச்சாட்டுகள் எதனையும் பதிவு செய்யவில்லை எனவும் nதிரியவரகிறது.
கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இதற்காக உள்துறை அமைச்சு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெரியவில்லை.
மோசடியாக இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வந்த குற்றத்தை ஒத்துக் கொண்டமையால் கருணாவிற்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை ஐல்ஸ்வேர்த் கிறவுண் கோட்டில் நீதிபதி மக்டௌல் ஜனவரி 25, 2008ல் வழங்கி இருந்தார். தண்டனையை வழங்கிய நீதிபதி அவ்வழக்கு அவருடைய கடவுச்சீட்டு மோசடி தொடர்பானது மட்டுமே என்றும் குடிவரவு மற்றும் விடயங்களை உள்துறை அமைச்சு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
நிதிபதி தண்டனையை வழங்கி தீர்பளிக்கையில் இத்தண்டனைக் காலம் முடிவடையும் போது உள்துறை அமைச்சு சிலசமயம் கருணாவை மேலும் தடுத்து வைக்கலாம் என்பதையும் கூறியிருந்தார்.
ஆனால் நீதிமன்றத்தில் கருணா தண்டனை பெற்ற நாள் வரை அவர் அரசியல் தஞ்சம் கோரியிருக்கவில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தினர் ஏற்கனவே அரசியல் தஞ்சம் கோரியிருந்தனர்.
அதன் பின்னர் கேணல் கருணா அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறாரா இல்லையா என்பதை உள்துறை அமைச்சு செய்தி அலுவலகம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
கொலை, ஆட்கடத்தல், கப்பம், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்p பல்வேறு மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தங்களதும் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் பிரித்தானிய பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று ரெட்றெஸ் மனிதஉரிமைகள் அமைப்பின் நிபுணத்துவ ஆலோசகர் கெவின் லூவே ஜனவரி 25ல் தெரிவித்தார்.
கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தாம் தொடர்ந்தும் பொலிசாருக்கு அழுத்தம் வழங்கி வருவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டு இருந்தார்.
இதே நடவடிக்கையையே HRW ம் எடுத்திருப்பதாகத் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக HRW உடன் தொடர்புகொண்ட போது அதற்கு பதிலளிக்கக் கூடியவர்கள் அப்போது அங்கிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கர்ணல் கருணா மீது மேலதிக வழக்குகளை தொடருவதற்கான போதிய ஆதாரங்கள் கிடையாது என்று Crown Prosecution Service - CPS தெரிவிப்பதாக இன்று (மே 9) பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
கருணா மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்து தண்டனை தரும் அளவுக்கு தேவையான யதார்த்தமான ஆதாரங்கள் போதியளவுக்கு இல்லை என Crown Prosecution Service - CPS கூறியுள்ளது. Crown Prosecution Service - CPS இன் ஆலோசனைப்படி பிரித்தானிய பொலிசார் கருணாவுக்கு எதிராக மனித விழுமியங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப் பத்திரிகையை பதிவு செய்யமாட்டார்கள்.
கருணா அரசியல் தஞ்சம் கோரியிருந்தால் அவரது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை விசாரிக்கும் வரை அவரைத் தடுத்து வைக்கலாம். தஞ்சம் கோராத பட்சத்தில் கருணா மிக விரைவில் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படுவார்.
இலங்கையில் கருணா - பிள்ளையான் முரண்பாடுகள் சுமுகமாக்கப்பட்டுதா இல்லையா? கருணா மீண்டும் ரிஎம்விபி யின் தலைவராக வருவாரா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரலாம்.
No comments:
Post a Comment