காத்தான்குடிப் பிரதேச முக்கிய அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் சுதந்திர ஊடகவியலாளர் ரீ.எல். ஜவ்பர்கான் தாக்கப்பட்ட சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
நேற்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை, கிழக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடமிருந்து கொழும்பு தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு நேர்காணலைப் பெற்றுக் கொள்ளச் சென்றபோதே ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் ஜவ்பர்கான் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைத் தாக்கிய நபர்கள் தொடர்பாக ஜவ்பர்கான் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, காத்தான்குடியிலிருந்து வெளிவரும் 'வார உரைகல்' வாராந்தப் பத்திரிகையின் ஆசிரியரான எம்.ஐ.ரஹ்மதுல்லா மீது கடந்த 9ஆம் திகதி இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதோடு, அவரிடமிருந்த 16,000 ரூபா பணத்தையும். டிஜிற்றல் கமரா ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஹ்மதுல்லா காத்தான்குடிப் பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரு சம்பவங்களையும் கண்டித்திருக்கும் சுதந்திர ஊடக இயக்கம், சகல அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்கவேண்டும்; எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளது.

No comments:
Post a Comment