Monday, 26 May 2008

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் விண்கலம்



அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் விண்கலமானது, செவ்வாய்க் கிரகத்தின் இதுவரை அறியப்படாத பிராந்தியத்திலான முதலாவது வரலாற்று முக்கியத்துவமிக்க புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

பூமியிலிருந்து 680 மில்லியன் கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டு செவ்வாய் கிரகத்தை வந்தடைந்த நாசாவின் ‘பீனிக்ஸ்’ விண்கலமானது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச நேரப்படி 23.53 மணிக்கு அக்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது.

செவ்வாய்க் கிரகத்திற்கான 10 மாத பயணத்தில், இறுதி 7 நிமிடங்கள் மிகவும் கடினமிக்க தருணங்களாகக் கருதப்பட்டன. செவ்வாய்க் கிரகத்தின் ஐதான வளி மண்டலத்தினூடாக இந்த விண்கலமானது வேக த்தை மணிக்கு 21,000 கிலோமீற்றர் அளவில் குறைத்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து நாசாவின் கலிபோர்னியா ஆய்வு நிலையத்தில் கூடியிருந்த விஞ்ஞானிகளும் பொறியியலாளர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் ‘பீனிக்ஸ்’ விண்கல திட்ட முகாமையாளர் பரி கோல்ட்ஸ்ரெய்ன் விபரிக்கையில், “எனது கனவு இன்றைய இரவு பலித்துவிட்டது” என்று கூறினார். உயிர் வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாய்க் கிரகத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் ஆராய அங்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலமானது, எதிர்வரும் சில நாட்களில் தனது மூன்று மாத கால விஞ்ஞான ஆய்வை ஆரம்பிக்கவுள்ளது.

இதன் பிரகாரம் இவ்விண்கலத்திலுள்ள இயந்திரக் கரமானது செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பை அகழ்ந்து ஆய்வை முன்னெடுக்கவுள்ளது. 1960 ஆம் ஆண்டு ரஷ்யாவால் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணம் உட்பட செவ்வாய்க் கிரகத்திற்கான அனைத்து விண்வெளிப் பயணங்களிலும் 50 சதவீதமானவை தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது. ‘பீனிக்ஸ்’ விண்கலமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி ‘டெல்ட்டா 11’ ஏவுகணை மூலம் புளோரிடாவிலுள்ள விமானப் படை நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.

No comments: