Wednesday, 28 May 2008

பாதுகாப்பு இரகசியங்களை கொழும்பிலிருந்து வெளிநபர்களுக்கு அனுப்பிய தூதுவர்கள் யார்?

அரசுக்கெதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவங்கள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முப்படையினர் மற்றும் விசேட நடவடிக்கை படைப்பிரிவினரின் செயற்பாடுகள் சம்பந்தமாக அரச பாதுகாப்புத்துறை சமர்ப்பித்துள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இரகசியத் தகவல்கள் ஒரு சில வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலமாகவே பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள், குழுக்கள் மற்றும் பிரமுகர்களுக்கு திட்டமிட்டு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கோமின் தயாசிறி மற்றும் எஸ்.எல். குணசேகர ஆகிய சிரேஷ்ட நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குழுக் கொலைச் சம்பவங்கள் பற்றி இந்த ஆணைக்குழு விசாரணை செய்து வரும் நிலையில் இதற்காக முப்படையினர் மற்றும் விசேட நடவடிக்கைப் பிரிவினர் சம்பந்தப்பட்ட சில இரகசியத் தகவல்கள், சாட்சிகள் மூலமாக ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ஆயினும் இந்த இரகசிய தகவல்களும் அறிக்கைகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகிய நாடுகளின் கொழும்பிலுள்ள தூதுவர்கள் மூலம் பல்வேறு அமைப்புகளுக்கும் குழுக்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் இவ்வாறு பாதுகாப்பு இரகசியத் தகவல்களை வெளி நிறுவனங்கள், அமைப்புகளுக்கு அனுப்புவது பாரிய குற்றம் எனவும் இதுபற்றி விசாரணை நடத்தும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடப்பட்டிருப்பதாகவும் மேலும் மேற்படி சிரேஷ்ட நீதியரசர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு பாதுகாப்பு இரகசியங்களை ஜனாதிபதி ஆணைக்குழு சார்ந்த சிலர் வெளிநபர்களுக்கு அனுப்பும் செயற்பாடானது ஸ்ரீலங்காவின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதிக்கு மேற்படி கோரிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் அதாவது நூற்றுக்கு தொண்ணூ<று வீதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களே ஆகும்.

இந்நிலையில், குறித்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பகவதி எனப்படும் இந்தியப் பிரமுகர் உட்பட குழுவினர் அண்மையில் நாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர். இதன்பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அங்கத்தவர்கள் அடங்கிய குழுவினர் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து அங்கு பிரசன்னமாயிருந்த ஐக்கிய அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கொழும்பிலுள்ள தூதுவர்களை இரகசியமாகச் சந்தித்துள்ளதாகவும் இந்தச் சந்திப்பின் போது அவர்கள் தூதுவர்கள் தரப்புக்கு மேற்படி இரகசிய தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்து இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் குறித்த வெளிநாட்டுத் தூதுவர்களிடம் பணம் தரும்படி கோரியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு சுயாதீன செயற்பாடுகளுக்கு குந்தகமானவை எனவும் மேலும் நாட்டுக்கும் அவமானத்தைத் தேடித்தருவதாக அமையும் எனவும் மேற்படி சிரேஷ்ட நீதியரசர் கோமின் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் தொண்ணூ<று வீதத்திற்கு மேற்படி எண்ணிக்கையிலான அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இவ்வாறு முப்படையினர் மற்றும் விசேட நடவடிக்கைப் பிரிவினர் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இரகசியத் தகவல்களை மேற்படி தூதுவர்கள் மூலமாக பணத்துக்காகப் பரிமாறிக் கொண்டுள்ளதாகவும், இந்தச் செயற்பாடுகளை மேற்படி ஆணைக்குழு அங்கத்தவர்களாகிய அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், தூதுவர்கள் மற்றும் வெளிநிறுவன நபர்களும் இணைந்து திட்டமிட்ட முறையில் செய்து வருவதாக மேலும் மேற்படி சிரேஷ்ட நீதியரசர் தெரிவித்துள்ளார்.

திவயின: 25.05.2008

No comments: