Wednesday, 28 May 2008

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி சர்வதேச அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க மறைமுக முயற்சி

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை

எம்.ஏ.எம்.நிலாம்

மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையிலும், குண்டுவெடிப்புகளை நடத்தியும் நாட்டின் இயல்பு நிலையை பாதிக்கச் செய்து ஸ்திரமற்ற சூழ்நிலையை உருவாக்கி அரசுக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கச் செய்யும் மறைமுக முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கெதிரான அரசியல் அமைப்புகளும் சில தன்னார்வ நிறுவனங்களும் விடுதலைப் புலிகளுக்காகப் செயற்பட்டு வருவதாகவும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதே இவற்றின் நோக்கமெனவும் தெரிவித்துள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் விஷேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய நூலகச்சேவைகள் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அதன் செயலாளரும், தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பலவீனமடைந்துவரும் விடுதலைப் புலிகள் சர்வதேசத்தினூடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு சில உள்ளூர், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களும், அரச எதிர்ப்பு அரசியல் சக்திகளும் துணைபோய்க்கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்த விமல் வீரவன்ஸ அரசாங்கம் இதுவிடயத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் கூடுதலாக நடமாடும் பஸ்நிலையம், ரயில்வே நிலையம், பஸ்வண்டிகள், ரயில்களில் குண்டுத்தாக்குதல்களை நடத்தியும், வன்முறைகளை தோற்றுவித்தும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத்தள்ளி இயல்பு நிலையைப் பாதிக்கச் செய்து அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசத்தினூடாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கச் செய்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் ஒரு திட்டத்தை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

புலிப்பயங்கரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கையை ஒருபோதும் தளர்த்தக் கூடாது. புலிகள் இன்று மிக மோசமான பின்னடைவைக் கண்டுள்ளனர். இதிலிருந்து மீள்வதற்காகவே அவர்கள் புதிய யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளனர். சர்வதேசம் எத்தகைய தாக்கத்தைப் பிரயோகித்தாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அரசு தளர்த்தி இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திவிடக்கூடாது.

அத்துடன் தெற்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்படுவோருக்கும், காயமடைவோருக்கும் இழப்பீடு கொடுத்துக்கொண்டு மட்டும் இருக்காமல் அதற்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை பேணும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துமாறும் விமல் வீரவன்ச யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர, நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: