* மேல்நீதிமன்றத்தில் தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களில் மூவர் பூஸா, தடுப்பு முகாமில் வைத்து நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி வரவெவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தாவும், ஜி.ஜெயக்குமாரும் இதனை நீதிபதியிடம் தெரிவித்தனர். இந்த வழக்கில் செல்லத்துரை வரதராஜன் சக்திவேல் இலங்கேஸ்வரன், சந்திரஐயர் ரகுபதி சர்மா, மற்றும் வசந்தி ரகுபதி சர்மா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாம், இரண்டாம், மூன்றாம் எதிரிகள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது. 4 ஆம் எதிரியான வசந்தி ரகுபதி சர்மா வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செல்லத்துரை வரதராஜன், சக்திவேல் இலங்கேஸ்வரன் மற்றும் சந்திரஐயர் ரகுபதி சர்மா ஆகிய மூன்று எதிரிகளும் 10 ஆம் திகதி புதிய மகஸின் சிறைச்சாலையில் இருந்து வேறு கைதிகளுடன் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அன்று இரவு பூஸா முகாமின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் 1 ஆம் எதிரியான செல்லத்துரை வரதராஜனும், 2 ஆம் எதிரியான சக்திவேல் இலங்கேஸ்வரனும் நிர்வாணமாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டதுடன், தகாத வார்த்தைகளால் தூசிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி என் சிறிகாந்தா சுட்டிக்காட்டினார். பூஸா தடுப்பு முகாமின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மூவர் இரண்டாம் எதிரியான சக்திவேல் இலங்கேஸ்வரனை கைகளாலும் காலாலும் மோசமாகத்தாக்கியுள்ளனர். இதனால், இரண்டாவது எதிரி தனக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று தெரிவித்துள்ளார் எனவும், விளக்கமறியலில் வைக்கப்படுபவரின் பாதுகாப்புக்கு நீதிமன்றமே பொறுப்பு எனவும் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார். பொலிஸாரின் இத்தகைய செயல்களால் சந்தேக நபர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் உளநலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். பூஸா தடுப்பு முகாமில் இவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அதனால் இவர்களை மீண்டும் மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். அத்துடன் பூஸா தடுப்பு முகாமில் சந்தேக நபர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளரிடம் இருந்து நீதிமன்றம் விளக்கம் கோர வேண்டும் எனவும், சட்டத்தரணி என். சிறிகாந்தா நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோல மூன்றாவது எதிரியான சந்திர ஐயர் ரகுபதி சர்மாவும் பூஸா தடுப்பு முகாமில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் நிர்வாணமாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி ஜீ.ஜெயக்குமார் மன்றில் தெரிவித்தார். எனவே, பூஸா தடுப்பு முகாமில் இருந்து அவரை மீண்டும் மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்று நீதிபதியிடம் கோரினார். அரச தரப்பு சட்டத்தரணி கபில வைத்திய ரட்ன எதிரிகளின் சட்டத்தரணிகளின் இக்கோரிக்கையை நிராகரித்து பாதுகாப்பு காரணங்களாலேயே எதிரிகள் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை நிர்வாகம் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளது என்றார். இதனால், எதிரிகளை மீண்டும் மகஸின் சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற எதிரிகளின் சட்டத்தரணிகளின் கோரிக்கைகள் தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தின் கருத்தைக் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது எனவும் கூறினார். இதனையடுத்து எதிரிகளை மீண்டும் மகஸின் சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து பூஸா தடுப்பு முகாம் பொறுப்பதிகாரி மற்றும், மகஸின் சிறைச்சாலை பொறுப்பதிகாரி ஆகியோரிடம் இருந்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, மேல் விசாரணையை ஜுன் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். சந்தேக நபர்களை பூஸா தடுப்பு முகாமில் அதன் பொறுப்பதிகாரியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். சந்தேக நபர்களை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் முன்பு நிறுத்தி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
Thursday, 15 May 2008
சந்திரிகா கொலை முயற்சி சந்தேக நபர்கள் பூஸா முகாமில் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment