Tuesday, 13 May 2008

பிள்ளையான் முதலமைச்சரானால் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவர்: "த மோர்ணிங் லீடர்"

கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் வேட்பாளரான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவைப் புறக்கணித்து துணை இராணுவக்குழுவின் தலைவரான பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள்.

முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்து கொண்டுள்ள இரு அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என தெரியவந்துள்ளது. முஸ்லிம் தலைவர்களின் இந்த தீர்மானம் அரசுக்கு இன்று தெரிவிக்கப்படவுள்ளது.

எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக நியமிக்குமாறு அரச தலைவருக்கு அனுப்பப்படவுள்ள கடிதத்தில் முஸ்லிம் அமைச்சர்களான எம்.எச்.மொஹமட், ரிசார்ட் பதியுதீன், அமீர் அலி, எ.எல்.எம்.அதாவுல்லா, பேரியல் அஸ்ரப், கே.பசீர், எம். நிஜாமுடீன், குசேன் பைலா, பைசர் முஸ்தப்பா, அப்துல் மஜூட், மயோன் முஸ்தப்பா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கிழக்கில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் அரச கூட்டணியில் 8 முஸ்லிம் பிரதிநிதிகளும், 6 துணை இராணுவக்குழு உறுப்பினர்களும், 4 சிங்களவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: