Saturday, 17 May 2008

படைக்கல சக்தியை நம்பி-சேனாதி-விடுதலைப் புலிகள் ஏடு

வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது மூன்று போர் முகங்களைத் திறந்து அவற்றில் கொன்றொழிப்புத் தாக்குதல் மற்றும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்பவற்றைத் தொடர்ச்சியாகச் செய்வதை நாலாம் கட்ட ஈழப்போரில் ஒரு பிரகடனப்படுத்தாத மூலோபாயமாக சிறிலங்கா படைத்துறை கைக்கொண்டு வருகிறது. அதற்கான களநிலை உத்திகளில் முதன்மையானதாக குறுகிய முனையில் பெருவாரியான ஆள்வலு மற்றும் படைக்கலச் சக்தியைப் பயன்படுத்துதல் எனும் கருத்தியலை சிறிலங்காப் படையினர் பயன்படுத்துகின்றார்கள்.

அவ்வுத்தி, ஓரிரு காவலரண்களைத் தாக்கியழித்தல் என்ற மட்டத்தில் இருந்து நில ஆக்கிரமிப்பிற்கான பெருமெடுப்பு நடவடிக்கைகள் வரை பல நிலைகளில் செயற்படுத்தப்படுகிறது.

வழக்கமாக, குறுகிய கால எல்லை நிருணயிக்கப்பட்ட போரொன்றை விரைவாக வென்றெடுப்பதற்கே இவ்வுத்தியை பல நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனாலும், ஆனையிறவு அல்லது பூநகரி போன்ற சிறிலங்கா படைத்துறை அடைய விரும்பும் தனியொரு இலக்கிற்கான போர்களே ஆண்டுக்கணக்கில் இழுபடும் நிலையில் கூட இவ்வுத்தியைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம் என்று சிறிலங்கா படைத்துறை நம்புவதாகத் தெரிகிறது. அதற்கு உடந்தையாக, படைக்கலக் கொள்வனவிற்கான வியூகங்கள் தேசிய கொள்கை வகுப்பில் முன்னுரிமை பெற்று நிற்பதான கருத்தும் தென்னிலங்கையை அவதானிப்போரிடையே உண்டு.

நாலாம் கட்ட ஈழப்போரின் நியமப் பரீட்சைத் தளமான வன்னிக்களமுனை கடந்த வருடம் மார்ச் மாதம் திறக்கப்பட்டது. அப்போது, தமது தரப்பு ஆள் இழப்புக்களை மட்டுப்படுத்துவதற்காக மிக அடர்த்தியான செல்வீச்சோடு பிளாட்டூன் மற்றும் கொம்பனி அளவிலான படைகளையே நடவடிக்கைகளில் இறக்கியது சிறிலங்கா படைத்துறை. ஆரம்பத்தில் சிறுசிறு கொன்றொழிப்;புத் தாக்குதல்களை நடத்துவதற்கான வாய்ப்புக்களை சிறிலங்கா படைத்துறை பயன்படுத்த எண்ணியது.

புலிகளின் தனித்த காவலரண்களை, அவற்றிற்கான பரஸ்பர ஆதரவு அல்லது பின்புல ஆதரவு கிடைப்பதற்கு முன்னதாக மிகப் பலங்கொண்டு தாக்கிக் கைப்பற்றி, வாய்ப்புக் கிடைத்தால் அவ்விடத்திலேயே நிலைகொள்ளுதல் அல்லது, எதிர்ப்பு அதிகமிருந்தால் பின்வாங்குதல் என்றளவில் அவர்களின் தாக்குதல் உத்தி அமைந்திருந்தது. அந்த முயற்சிகளில் தங்களால் இயன்றளவு அடர்த்தியான சூட்டுவலுவை அவர்கள் பிரயோகித்தார்கள்.

இருந்தபோதும், காலப்போக்கில் அத்தாக்குதல்களின் இறுதி விளைவுப்பேறுகள் பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் மறுதலையான முடிவுகளைத் தரத்தொடங்கின. முதலில், அத்தாக்குதல்களில் புலிகளின் இழப்பைப் பல மடங்கு அதிகரித்து ஊடகங்களில் பரப்பித் திருப்திப் பட்டுக்கொண்டது சிறிலங்கா. இருந்தும், உயிரிழக்கும் ஒவ்வொரு சிப்பாயுடனும் மேலும் நான்கு சிப்பாய்கள் என்ற விகிதத்தில் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறுவதால், காலம் மற்றும் தூரம் என்ற அடிப்படையான படைத்துறை மதிப்பீடுகளின்படி போரிலே தாங்கள் பின்தங்கி வருவதை சிறிலங்கா படைத்துறை உணரத் தலைப்பட்டது.

விளைவாக, சந்தடியற்ற படிப்படியான உத்திமாற்றம் ஒன்றை சிறிலங்கா படைத்துறை செய்யத்தொடங்கியது. நடவடிக்கையில் ஈடுபடும் படையினரின் அளவை அதிகரிப் பதே அந்த மாற்றம். அவ்வாறு அதிகளவு துருப்பினரை முன்னே தள்ளுவதன் மூலம், தனது இலக்குகளை குறித்த கால வரம்பினுள் அடையமுடியும் என்பதே சிறிலங்கா படைத்துறையின் தற்போதைய நம்பிக்கை விளைவாக, இப்போது, ஜெயசிக்குறு பாணியில் ஒன்றுக்கு மேற்பட்ட டிவிசன்கள் ஒரே நடவடிக்கையில் சம்பந்தப்படுவதும், பட்டாலியன் கணக்கில் படையினர் முன்னகர்வதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றத்தினை தமது படைகளால் அடைய முடிய படைகளால் அடையமுடியவில்லை என்ற கருத்து மீண்டும் எழுந்துள்ள நிலையில், தோல்விகளுக்கான விதவிதமான காரணங்களைத் தேடுவதில் சிறிலங்கா படைத் தரப்பு ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக ஏப்ரல் மாத இறுதியில் முகமாலையில் படையினருக்கு ஏற்பட்ட படுதோல்வியை நியாயப்படுத்தும் முயற்சியில் சிங்களப் படைத்தரப்பு திணறிப் போய் நிற்கிறது. அந்த முன்னரங்கில் மட்டும் தமது தரப்பு வீரர்கள் 1,400 பேர் நிறுத்தப்பட்டிருப்பதாக அண்மையில் லக்பிம இதழுக்கான ஒரு செவ்வியில் சொல்லியிருந்த சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, அதைத்தவிர, அந்த நடவடிக்கையில் ஐந்து பட்டாலியன்கள் முன்னே தள்ளப்பட்டதையும் ஒத்துக்கொண்டுள்ளார்.

புலிகள் அங்கு வலிமையாக இருப்பதே தங்கள் தோல்விக்குக் காரணம் என்றும் அவர் சொன்னார். சிறிலங்காவின் படைத்துறை நியமங்களின் படி ஒரு பட்டாலியனில் 1,102 சிப்பாய்களும் 46 அதிகாரிகளும் இருத்தல் வேண்டும். அதைவிட, அந்த நடவடிக்கையில் பின்களச் செயற்பாடுகளில் ஈடுபட்ட மோட்டார், ஆட்லறி, பல்குழல் எறிகணை இயக்குநர்கள், நிருவாக அணியினர் மற்றும் பின்னால் நின்று சூட்டாதரவு நல்கிய கவசப் படையினர் என்று ஆயிரக்கணக்கான ஆள்வலு அங்கே பயன்படுத்தப்படிருக்கிறது. அதைவிட, வான்படையும் ஏக காலத்தில் புலிகளின் பின்தளங்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் செய்துள்ளது. தவிர, தளபதி பொன்சேகா அந்தத் தாக்குதலை நேரடியாகத் திட்டமிட்டு நடத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இவையனைத்தையும் மண் கவ்வச் செய்யும் ~வலிமையை| அங்கே புலிகள் கொண்டுள்ளதையே சரத் பொன்சேகா சொல்லியிருக்கிறார்.

வலிமை என்ற பதம் தளபதியால் சொல்லப்பட்டிருப்பது, இன்னுமோர் நடவடிக்கையைச் செய்வதானால் ஏலவே பயன்படுத்திய படைக்கலச் சக்தி மற்றும் ஆள்வலுவிலும் அதிகளவான வலிமையைப் படைத்தரப்பு பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதைச் சொல்வதாகவே கொள்ள வேண்டும். இது, டிவிசன் கணக்கில் படைகளை இறக்குதல் என்ற ஜெயசிக்குறு உத்திக்கு எதிராக தான் நிறுவ முயன்ற சிறு அணிகளைக் கொண்டு பொறுமையாகத் தாக்கி முன்னேறுதல் என்ற பாதையில் இருந்து சரத் பொன்சேகாவைத் தடம்மாற வைக்கும்.

தனது நடவடிக்கை ஜெயசிக்குறுவின் மீட்டலாக அமைந்து விடக்கூடாது என்று கருதும் பொன்சேகாவிற்கு இது உவப்பான நிலைமையல்ல. தவிர, ஜெயசிக்குறு நிகழ்ச்சி நிரலில் புலிகளுக்குச் சாதகமான பக்கங்கள் இருந்தன என்ற பார்வையும் சரத் பொன்சேகாவிடம் உண்டு. ஆனால், ராஜபக்ச குடும்பத்தாரின் தேவையோ அவசர வெற்றி ஒன்று தான். 2006 ஒக்ரோபர் 11 அன்று தோல்வியில் முடிந்த நடவடிக்கையின் பின்னால் கோத்தபாயவின் அழுத்தம் இருந்தது என்று சரத் பொன்சேகா கூறியிருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு விடயங்களை எழுதி வரும் இந்திய ஊடகர் ராமன் மே மாத முற்பகுதியில் தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறான அழுத்தம் மீண்டும் எழவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை தவிர, நடவடிக்கைகளைத் தொடக்குவது சிறிலங்காத் தரப்பினரும் பின்னர் அதைக் கொண்டு நடத்துவது புலிகளும் என்பதாகவே ஜெயசிக்குறு சமர்க்களம் அமைந்திருந்தது. இப்போது இங்கே நிகழும் ஒவ்வொரு குறுஞ்சமர்களிலும் அவ்வாறான பரிமாணங்கள் புலிகளால் புகுத்தப்படும் நிலையில், தொடக்கியதைச் சேதமின்றி முடிக்க வேண்டிய அழுத்த நிலையும் படைத்தலைமைக்கு இருக்கிறது.

இந்நிலையில், தான் மீண்டுமொரு படையெடுப்பைச் செய்வதற்காக அதிக ஆட்பலம் மற்றும் படைக்கலச் சக்தியை சரத் பொன்சேகா திரட்ட முனையக் கூடும். குறிப்பாக நேரடியற்ற சூட்டாதரவை அதிகப்படுத்துவதற்கு சிறிலங்கா தரைப்படை கடந்த சில மாதங்களாக முயன்று வருகிறது. தற்போது பயன்படுத்தப்படும் பல்குழல் எறிகணையின் செயற்றிறன் மற்றும் செலவு சார்ந்த சில கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், மலிவானதும் அதிக தாக்குதிறன் உள்ளதுமான ரொக்கட் ஆட்லறி ஒன்றை சிறிலங்கா படைத்துறை கொள்வனவு செய்வதாக பாதுகாப்புத்தரப்பிற்கு நெருக்கமான ஊடக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

240 மி.மீ அளவுள்ள குறுந்தூர வீச்சுக்கொண்ட அதன் வெடித்தலை அதிக வெடிப் பொருள் கொண்டு அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது, ஈரானியத் தயாரிப்பான பலாக் - 1 வகையாக இருக்கலாம் என்று அவ்வாட்டாரங்கள் ஊகம் தெரிவித்தாலும், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. 240 மி.மீ அளவுள்ளதும், 50 கி.கி வெடித்தலை கொண்டதும், 10 கி.மீ தூரவீச்சு உள்ளதுமான பலாக் - 1 எறிபடையோடு விடுதலைப் புலிகள் அண்மைய காலங்களில் பயன்படுத்தி வருவதாகச் சொல்லப்படும் ~சமாதானம்| மற்றும் ~பபா| போன்ற எறிபடைகளையும் அவ்வட்டாரங்கள் ஒப்பிடத் தவறவில்லை.

'உன்னுடைய நண்பர்கள் யாரென்று சொல், நீயாரென்று சொல்கிறேன் என்பது மேற்குலகில் நன்கு அறியப்பட்ட பழமொழி. நீP ஈடுபடுத்தும் படைக்கலச் சக்தியை என்னவென்று சொல், உன் எதிரியின் பலத்தை எவ்வளவென்று சொல்வேன்" என்பது ஈழவிடுதலைப் போரின் ஒவ்வொரு கட்டத்திலும் பொருந்தக்கூடிய ஒரு புதுமொழியாகத் தென்படுகிறது. வானிலும், கடலிலும், தரையிலும் சிறிலங்கா படைத்துறை அறிமுகப்படுத்தும் உத்திகள் மற்றும் கருவிகள் முறி யடிக்கப்படும் ஒவ்வொரு தருணங் களிலும், புலிகளின் பலத்திற்கான நிரூபணமாகவும் சான்றிதழாகவுமே அவை தோற்றமளிக்கின்றன.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (09.05.08)

No comments: