கடந்த 20 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டு மோதல்களும் கடல்கோள் பேரழிவுகளும் எதிர்பார்க்கப்பட்ட மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை இலங்கை அடைய முடியாத நிலைக்கு பின்தள்ளியுள்ளது. 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கமும் இந்நாட்டு மக்களும் ஐ.நா. மிலேனியம் உச்சி மாநாட்டில் மிலேனியம் பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்ததும் யாவருக்கும் தெரியும். மிலேனியம் இலக்கானது 2015 ஆம் ஆண்டு முடிய முன்பு உலகை மிக மோசமாக வாட்டும் வறுமையை அகற்றுவோம் என்ற உலக மக்களின் பிரகடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இவை எட்டு இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவை (1) வறுமையை அகற்றுதல் (2) சர்வதேச தரத்திற்கு கல்வியை உயர்த்துதல் (3) பாலியல் சமத்துவமும் பெண்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குதலும் (4) சிசு மரணத்தைக் குறைத்தல் (5) தாய்மாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் (6) எச்.ஐ.வி./எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களை எதிர்த்து போராடுதல் (7) சுற்றாடலை பாதுகாத்தல் (8) அபிவிருத்திக்கான உலகளாவிய பங்களிப்பை மேம்படுத்துதல். இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் போரை நிறுத்தி நாட்டில் சமாதான சூழலை ஏற்படுத்தாவிட்டால் எதிர்பார்க்கப்பட்ட வறுமையை 2015 ஆம் ஆண்டளவில் குறைக்க முடியாது என பொருளாதார அறிஞர் லோயிட் யாப்பா கூறியுள்ளார். புள்ளிவிபர இலாக்காவின் வருடாந்த அறிக்கைகளின்படி இலங்கை முழுவதும் விசேடமாக கிராமப் பகுதிகளிலும் போர் நடக்கும் வடகிழக்கு மாகாணங்களிலும் வறுமை வேகமாக அதிகரித்துச் செல்வதாகவும் அது குறைவதற்குரிய பொருளாதார அபிவிருத்தி அமைப்பு இலங்கையில் இல்லை என்பதையும் புள்ளிவிபரங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன. நகரங்களில் உள்ள வறுமையானது 1990 - 1991 ஆம் ஆண்டுகளிலும் 2002 ஆம் ஆண்டுகளிலும் குறைந்து வந்துள்ளது. 1990 - 1991 ஆண்டுகளின் வறுமையின் கணக்கெடுப்பு வீதம் 16.3% எனவும் 2002 ஆம் ஆண்டு அது 7.9% எனவும் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன. இதற்கு காரணம் என்னவென்றால், நகரங்களின் வறுமை நிலை 1/2 வாசிக்கு மேல் குறைந்துள்ளது என்பதாகும். ஆனால், கிராமங்களில் ஓர் குறிப்பிட்ட அளவு தான் குறைந்துள்ளது. 1990/1991 ஆம் ஆண்டுகளில் வறுமையின் கணக்கெடுப்பு வீதம் 29.4% ஆகும். 1995-96 ஆம் ஆண்டுகளில் இது 30.9% ஆக அதிகரித்துள்ளது. ஆனால், 2002 ஆம் ஆண்டு இது 24.7% மாகக் குறைந்துள்ளது. மலைநாட்டுப் பகுதியின் கணக்குவீதம் 1990-1991 ஆண்டுகளில் 20.5%. ஆனால், 1995-1996 ஆம் ஆண்டுகளில் வறுமை 38.4% வீதத்தினால் உயர்ந்துள்ளது. 2002 ஆம், ஆண்டு இந்த வீதம் 30% குறைந்துள்ளது. நாங்கள் முழு இலங்கையைப் பற்றியும் சிந்திப்போமாக இருந்தால் வறுமையின் கணக்கெடுப்பு வீதம் 1990-1991 ஆம் ஆண்டுகளில் 26% மாகவும் அது 2002 ஆம் ஆண்டுகளில் 22.7% மாகக் குறைந்துள்ளது. ஆனால், வடகிழக்கு மாகாணங்களில் மேற்படி கணக்கெடுப்புகள் செய்யப்படவில்லை. ஆனால், இங்குள்ள நிலைமையோ சொல்லும் தருவாயில் இல்லை. மீன்பிடிக்கத்தடை, விவசாயத்தடை, அதிஉயர் பாதுகாப்பு வலையம் என்ற போர்வையிலும் சமாதானத்துக்கான யுத்தம் என்ற போர்வையிலும் இராணுவ மயமாக்குதல் மூலம் தமிழ் மக்களை தமது தாயகத்தில் இருந்து வெளியேற்றி அவ்விடங்களில் இராணுவ மயமாக்குதலின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரத் தடை, வன்னிக்கான பிரயாணத் தடை, ஏ9 பாதைத் தடை இவற்றின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழர் தாயகத்தில் 100% மான வறுமை நிலவுகின்றது. பாலூட்டும் தாய்மாரும், கர்ப்பிணித் தாய்மாரும் சிறு குழந்தைகளும் பசியின் கோரத் தாக்கத்தினால் மரணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். உயர் வறுமையினால் தாய்ப்பால் இல்லாத காரணத்தால் தாயும் சேயும் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. வடகிழக்கைத் தவிர்த்துப் பார்க்கும் போது அங்கேயும் பாதிப்புகள் உண்டு. விசேடமாகக் குறிப்பிடும்போது சத்துணவுக் குறைபாடு ஓர் பாரிய வீழ்ச்சி நிலையை ஏற்படுத்தும் என குறிப்பிடலாம். எமது நாட்டின் சுகாதாரம், கல்வி இவைகளின் தரம் உயர்ந்துள்ளது எனப் பெருமை அடிக்கும் நாம், அங்குள்ள மக்களின் போஷாக்கு நிலைமையைப் பற்றி சிந்திப்பதில்லை. அதேநேரம், இங்குள்ள சத்துக் குறைந்த பெண்களையும் குழந்தைகளையும் கணக்கெடுப்போமாக இருந்தால் அது மிகவும் அதிகமாகும். 30% த்தையும் தாண்டியுள்ளது. சிறுபிள்ளைகள் மரணம் அதிகரித்துள்ளது. சிறுபிள்ளைகளின் மரணவீதம் 1997 ஆம் ஆண்டு 16% ஆகும். ஆனால், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இது 8% மாக உள்ளது. மலைநாட்டுப் பகுதிகளில் சிறுபிள்ளைகளின் மரணவீதம் மிகவும் அதிகம். அது 24% மாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கலாசாரத்தைப் பொறுத்தவரையில் தாய்மாரும் பெண்பிள்ளைகளும் உண்பது மிகவும் குறைவாகும். இதனால், நமது எதிர்கால பரம்பரை நோய்ப் பாதிப்புள்ள சக்தி குறைந்த சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு குறிப்பிடக்கூடிய அதிர்ச்சி என்னவென்றால் சத்துணவு அதிகமாக இருந்தாலும் சாப்பிடும் அளவு மிகவும் குறைவாகும். ஆடை நீக்கிய பால்மாவைப் பாவிப்பது மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால், இது உண்மையான சத்துணவு அல்ல. கிராமப்புறங்களில் உள்ள பால்ப் பண்ணை உற்பத்திகள் குறைந்துள்ளன. உடன் கறந்த பசுப்பாலை குடிக்கும் முறைகள் குறைந்துள்ளன. இதற்குப் பதிலாக கடைகளில் செயற்கையாகத் தயாரித்த சத்துக் குறைந்த உணவுகளை பாவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. எழுத்தறிவு - கல்விநிலை - நகர மயமாக்குதல் வறுமையைக் குறைத்துள்ளது என பல செய்திகள் கூறுகின்றன. அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான கட்டுமான வசதிகளும் அதற்கான போக்குவரத்து வசதிகளும் அபிவிருத்தியடைந்தபடியினால், அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளது. உதாரணமாக 1977 இல் நகரப்பகுதிகளில் எழுத்தறிவு வீதம் 94% வீதமாகும். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது கிராமப்பகுதிகளில் 92%, மலைநாட்டுப் பகுதிகளில் 77% 3-5 மாத குழந்தைகளின் குறைவளர்ச்சி வீதம்: நகரப்பகுதி 9.8%, கிராமப்பகுதி 32.8%, மலைக்காடு 33.8% பாதுகாப்புள்ள சுத்தமான குடிநீர் வசதி: நகரப்பகுதி 74% ஆனால், வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு மட்டும் நல்லதண்ணீர் வசதிகள் உண்டு. மன்னார், வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை போன்ற மாவட்டங்களில் சுகாதாரக் குறைபாடுகளினால் சிறுநீர் குறைபாட்டு நோய் (Kidney) கள் பெருகி உள்ளன. அண்மையில் கம்பளை பகுதிகளிலும் அதைத் தொடர்ந்து நுவரெலியா பகுதிகளிலும் பரவி வந்த கல்லீரல் சம்பந்தமான நோய்களும் மனிதக் கழிவுகளும் நோய்களை பெருக்கிவருகின்றன. நாட்டில் 68% மக்களுக்கு மட்டும் ஆரோக்கியமான வாழ்விற்குரிய சுகாதார வசதிகள் உண்டு. பிரதேசங்களில் சமத்துவமற்ற வித்தியாசம், வித்தியாசமான பொருளாதார வளர்ச்சிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மேல் மாகாணம் அதிகளவு உற்பத்தி (GDP) அதாவது 50% மேற்பட்ட பங்கினை உற்பத்தி செய்கிறது. நுகர்வுப் பொருட்களின் வருமான வறுமையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மொனறாகலை மாவட்டம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மானிட தேவைகளான சுகாதாரம், கல்வி, சமூகசேவை குறைபாடுகள் உள்ள மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் இருக்கிறது. மேலும் ஒப்பீட்டளவில் பார்ப்போமாக இருந்தால், வடகிழக்கு மாகாணங்களான (1)மன்னார், (2)வவுனியா, (3)முல்லைத்தீவு, (4)கிளிநொச்சி, (5)யாழ்ப்பாணம், (6)மட்டக்களப்பு, (7)அம்பாறை, (8)திருகோணமலை ஆகிய 8 மாவட்டங்களும் இன்று பிச்சை எடுக்கும் மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. நிலையான பட்டினி/வறுமை நாட்டின் வறுமை குறையாமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. (1)மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சி வீதம். (2) கட்டுமான அபிவிருத்தியில் உள்ள குறைபாடுகளும் கிராமப்புறங்களில் நடைபெறும் சேமநல குறைபாடுகளும், இதன்மூலம் ஏற்படும் சமத்துவமற்ற வருமானப் பகிர்வுமாகும். 1977 ஆம் ஆண்டுக்கு முன் வருடாந்த சராசரி பொருளாதார வளர்ச்சி வீதம் 3% மாகும். 1977 ஆண்டுக்கு பின்பு இது 5% மாக அதிகரித்தது. அதிஉயர் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமாயிருந்தால் தொடர்ந்து முதலீடு செய்யக்கூடிய நிரந்தரமான மூலதனத் தேவை (Capital) மிகவும் முக்கியமாகும். துரதிர்ஷ்ரடவசமாக நமது தேசிய சேமிப்பு வீதம் மிகவும் குறைந்த வீதத்தில் உள்ளது. கிழக்காசியா, தென் கிழக்காசிய நாடுகளில் மிகவும் கூடிய சேமிப்புகள் செய்யப்படுகின்றன. அது 40% மாகும். அரச மூலதனம் கடந்த சில வருடங்களாக மிகவும் குறைவாகும். இது 5% மாகும். ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1980 ஆம் ஆண்டுகளில் இது 10% மேல் இருந்தது. இன்று நாங்கள் வரவு - செலவு திட்டத்தில் குறைபாட்டை நீக்குவதற்காக அரச பொது மூலதன முதலீட்டை குறைக்கிறோம். அதேநேரம், வருமானமற்ற சமூகநல சேவைகளுக்கும் வருமானம் இல்லாத அரச சம்பந்தமான தொழில் முயற்சிகளுக்கும் அரச சேவைகளுக்கும் அதி உயர் பாதுகாப்பு செலவீனங்களுக்கும் அரச கடன் கொடுப்பனவுகளுக்கும் அதிக பணத்தை ஒதுக்குகிறோம். அரச சமூகசேவை செயல் திட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக மிகவும் குறைந்த முறையில் செயல்படுத்தப்படுகின்றன. சமூகசேவை செயல் திட்டங்களின் கீழ் உண்மையான மானியம் பெற வேண்டியவர்களுக்கு அந்த மானியம் கிடைப்பதில்லை. ஆனால், அரச மானியம் பெறத்தகுதியற்றவர்களுக்கு அந்த மானியங்கள் கொடுக்கப்படுகின்றன. அரசின் குறைவான ஸ்தீரமற்ற நிலையும் கட்டுமானப் பணிகளின் அபிவிருத்தியும் நாட்டில் நிலவும் `சட்டதிட்டங்களும் அதிக ளவான, உள்நாட்டு, வெளிநாட்டு மூலதன முதலீடுகளை உள்வாங்க முடியாத நிலையில் இருக்கின்றது. கட்டுமானப் பணிகளின் அபிவிருத்திக்கும் அத்துடன் சுகாதார கல்விச் சேவைகளுக்கும் தேவையான முதலீடுகளை செய்யாவிட்டால், கிராமப்புறங்களில் தொழில்களை வழங்குவதற்கு தேவையான வேலை வாய்ப்புகளைச் செய்ய முடியாது. தென் கிழக்காசிய நாடுகளும், தூர கிழக்கு நாடுகளும் மொத்த வருமானத்தில் 25% பணத்தை உற்பத்தி வேலைகளுக்கு முதலீடு செய்வதனால், 8% வருடாந்த வளர்ச்சி வீதத்தை பெற்றுவருகின்றன. 2003 ஆம் ஆண்டு கிழக்காசியா வெளிநாட்டு நேரடி முதலீடாக 53 பில்லியன் (Billion) டொலர்களை பெற்றது. தென் ஆசியா 5.3 பில்லியன் (Billion) டொலர்களை வெளிநாட்டு நேரடி மூலதனமாகப் பெற்றது. இதில் இந்தியாவின் பங்களிப்பு 4.3 பில்லியன் (Billion) டொலர்களாகும். இந்த வெளிநாட்டு நேரடி மூலதனம் (FDI) மிகவும் முக்கியமாகும். ஏனெனில், முதல் தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தொழில்நுட்பம், சந்தைவாய்ப்பு சம்பந்தமான அறிவையும் நுணுக்கங்களையும் அளிக்கிறது. சமச்சீரற்ற வருமானப் பகிர்வு வறுமைக்கான ஓர் காரணமென புள்ளிவிபரங்கள் மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளன. மிகவும் கடுமையான பட்டினி நிலைக்கு மலைநாட்டுத் தமிழர்களும் ஊவா மாகாணத்திலும் சப்ரகமுவ மாகாணத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் மக்களும் உயர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட மக்கள் பட்டினியால் பாதிக்கப்படாமல் சுகமாக வாழும் நிலையில் உள்ளார்கள். ஆனால், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இவர்கள் அனைவரையும் விட கூடிய அதிகப்படியான வறுமையினால் பாதிக்கப்பட்டு, போரினால் மரணத்தில் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளை நாடிக்கொண்டிருக்கிறார்கள். இலஞ்சமும் நேர்மைற்ற பணக்கையாளல்களும்: கிராமிய வறுமைக்கு அடுத்த காரணம், இலஞ்சமும் நேர்மையற்ற பணக் கையாளல்களுமாகும். இலங்கை பொருளாதார சங்கத்தின் ஆராய்ச்சி அறிக்கையின்படி 2% இலங்கையின் உற்பத்தி வருமானம் நேர்மையற்ற இலஞ்ச செயல்பாடுகளினால் இழக்கப்படுகிறது. 20% மூலதன செலவீனங்கள் மத்திய அரசு மாகாண அரசுகளினால் இழக்கப்படுகின்றது. இதற்குக் காரணம் இலஞ்சமும் நேர்மையற்ற பணக்கையாளல்களுமாகும். சில ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்பந்தப்படி முழுப் பணமும் கொடுக்கப்பட்டு முடிந்துவிட்டது. ஆனால், வேலைகள் ஒன்றும் செய்யப்படவில்லை. பொது நிர்வாக அமைச்சின் அரசியல் பக்கச்சார்பினால் இலஞ்சக் கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், 1972 ஆம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் குறைபாடுகளாகும். அரசியல் அமைப்பு சட்டத்தின் அதிகாரங்களை (1)சட்ட ஆக்கத்துறை, (2)நிர்வாகத்துறை, (3)நீதித்துறை அமைப்புகளுக்கு சரியான முறையில் பகிர்ந்துகொடுக்க வேண்டும். அத்துடன், இந்த அரசியல் அமைப்பு சட்டங்கள் திருத்தி அமைக்கப்படல் வேண்டும். மேற்கூறிய மூன்று துறைகளும் சுதந்திரமாக இயங்கினால் நாட்டின் முகாமைத்துவம் உயர்ந்த நிலையில் பேணப்படக்கூடிய நிலையில் இருக்கும். கிராமிய வறுமைக்கு அடுத்த காரணம், கொள்கை திட்டமிடலில் காணப்படும் முரண்பாடுகள் ஆகும். உலக மயமாக்கலுக்கு அமைவாக கொள்கைத் திட்டங்களை அமைத்தால் அது வருமானத்தையும வருமானப் பகிர்வையும் அபிவிருத்தி செய்யும். உதாரணமாக நெல் செய்கையை எடுப்போமாக இருந்தால், கொள்கைத் திட்ட நோக்கம் சுயதேவையை பூர்த்திசெய்யக்கூடியதாக மட்ட டுமன்றி, இலாபத்தை அடிப்படையாக வைத்து திட்டமிடப்படல் வேண்டும்.
-பி.ஏ. அந்தோனிமார்க்-
Friday, 9 May 2008
எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மிலேனியம் அபிவிருத்தி இலக்கினை போர்ச் சூழலில் இலங்கை அடைய முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment