Tuesday, 27 May 2008

ஐ.தே.க.வின் நிகழ்ச்சி நிரலுக்கமைய சோமவன்சவை நீக்கிவிட ஜே.வி.பி.யிலுள்ளோர் முயற்சி

* தேசிய சுதந்திர முன்னணியின் நந்தனகுணதிலக குற்றச்சாட்டு

டிட்டோ குகன்

ஜே.வி.பி. தலைமைத்துவத்திலிருந்து சோமவன்ச அமரசிங்கவை நீக்கிவிட்டு தமக்கு தேவைப்படும் ஒருவரை நியமிக்க அக்கட்சியிலுள்ளவர்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறியவர்களால் அமைக்கப்பட்டுள்ள புதியகட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நந்தன குணதிலக தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களே இவ்வாறான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தேசிய நூலக, ஆவணங்கள் சபை கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நந்தன குணதிலக இவ்வாறு கூறினார்.

ஐ.தே.க.வின் தேவைக்கேற்ப ஜே.வி.பி.க்குள் செயற்படுபவர்களே சோமவன்ச அமரசிங்கவை பலவீனப்படுத்தி அவர்களுக்கு எதிரானவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர். அப்படித்தான் விமல்வீரவன்சவும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர்கள், சோமவன்சவை பயன்படுத்தி அவரது வாயாலேயே தங்களுக்கு எதிரானவர்களை தூற்றவைத்து இறுதியில் சோமவன்சவையே தலைமைப் பதவியிலிருந்து தூக்கப் போகின்றனர். இந்த சூழ்ச்சிக்காரர்கள் தங்களது விசுவாசிகளை மட்டுமே கட்சியின் மத்திய குழுவுக்குகொண்டுவரப் பார்க்கின்றனர்.

அதன் பிரதிபலனாகவே விமல் வீரவன்ச வெளியேறினார். இறுதியில் சோமவன்ச அமரசிங்கவை வெளியேற்றப் போகின்றனர்.

நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) நடக்கப் போகும் ஜே.வி.பி.யின் 5 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைமைத்துவக் குழு தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் பாடுபட்டு கட்டியெழுப்பிய கட்சி, இறுதியில் ஐ.தே.க.வின் சூழ்ச்சிக்கு அடிபணியப் போவதே இந்த மாநாட்டில் நடைபெறப்போகிறது.

இறுதியில், சோமவன்ச அமரசிங்கவை ஆலோசகர் போன்றதொரு பதவியில் வைத்திருந்து, வெளிநாடு அனுப்புவது மட்டுமே நடக்கப் போகிறது என்றார்.

No comments: