Tuesday, 27 May 2008

புலிகளுக்கு எதிரான போரைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை சிதைப்பதுடன் குடும்ப ஆட்சியை வலுப்படுத்தவும் முயற்சி


* ஜேர்மனியில் ரணில்

ஜனநாயக கொள்கைகளிலிருந்தும் மெதுவாக விலகி சர்வாதிகார ஆட்சிக்கு இலங்கை நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ஜனநாயக கோட்பாடுகளைச் சிதைக்க புலிகளுக்கு எதிரான போரை பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பாரிய திட்டம் 2050 சுதந்திர உலகத்திற்கான உபாயங்கள் எனும் கருப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கோட்பாடுகளை அழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் கட்சி முறைமையை பலவீனமாக்குவதும் அதற்குப் பதிலாக குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதும் உள்ளடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது;

ஜனநாயகங்களில் தனி மனித சுதந்திரங்கள் எப்போதும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை. பாராளுமன்ற இறைமையுடன் இணைந்ததான பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையால் எதனையும் செய்ய முடியுமென்பது அதிகளவானோர் மத்தியில் காணப்படும் நம்பிக்கையாகும். ஆணைப் பெண்ணாக்கவோ அல்லது பெண்ணை ஆணாக்கவோ முடியாததை தவிர வேறு எதனையும் செய்ய முடியும். ஜனநாயக முறைமைகளுக்கும் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு காண முடியுமாக இருந்தாலேயே சுதந்திரமான உலகம் என்பது சாத்தியமானதொன்றாக அமையும்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரே மேற்கு ஐரோப்பாவில் தனிப்பட்டவர்களின் சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட்டது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அமைப்பானது ஏற்றத்தாழ்வுகளை கருத்திற்கெடுக்காமல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்த முயற்சிக்கும் போது தனிமனித சுதந்திமென்ற கோட்பாடு இரண்டாம் பட்சமாகி விடுகின்றது. இவை ஜனநாயக கோட்பாடுகளை சிதைக்கும் நாடுகள் என்று பாரித் சக்காரியா என்பவர் தனது `எதிர்கால சுதந்திரம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இன்று உலகில் ஜனநாயக கோட்பாடுகளை சிதைக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.

இதர சில நாடுகளில் ஜனநாயக ரீதியில் தேர்ந்ெu-kU-Pப்பட்ட தலைவர்கள் என்றும் அழைக்கப்படுபவர்கள் தாங்கள் தெரிவு செய்யப்பட்ட பின்பு ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை திசைமாற்றி மக்களின் உரிமைகள், சுதந்திரங்களை விலையாகச் செலுத்திக் கொண்டு தமது சொந்த அதிகாரங்களாக மாற்றிக் கொள்கின்றனர். எனது நாடான இலங்கையும் மெதுவாக ஜனநாயகத்தை சிதைத்து சர்வாதிகார ஆட்சிக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் துணை இராணுவக் குழுவுடன் தேர்தல் கூட்டணிக்குள் பிரவேசித்துள்ளது. மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட குழுவுடன் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வாக்காளரை அச்சுறுத்தியும் தமிழ் பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை நிரப்பும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்ற அதிகாரத்தை மீறி கடன் திரட்டியுள்ளதுடன் செலவினம் தொடர்பான பாராளுமன்றத்தின் கட்டுப்பாடும் மீறப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன பொதுச் சேவை ஆணைக்குழு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, சுயாதீன மனித உரிமை ஆணைக்குழு என்பனவற்றின் செயற்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகம், மற்றும் தனி மனித சுதந்திரம் என்பன பரஸ்பரம் ஆதரவாக இருக்க வேண்டுமென்ற கொள்கையை மேம்படுத்துவதன் மூலமே இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காண முடியும்.

No comments: