Tuesday, 27 May 2008

மலைநாட்டுக்குள் பரவலாக ஊடுருவும் விடுதலைப் புலிகள்--லங்காதீப

அண்மையில் மன்னார்ப் பிரதேசத்தில் வைத்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட மதகுரு ஒருவரை கொழும்புப் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு உத்தியோகத்தர்கள் கைதுசெய்ததைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மத்திய மாகாணப் பிரதேசங்களிலும் குறிப்பாக பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதும் அங்கு ஆயுதங்கள், வெடிகுண்டுப் பொருட்களையும் பெருந்தொகையில் பதுக்கிவைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பெரியகமம் என்னும் பிரதேசத்தில் வசித்துவந்தவரும் நகுலன் என்னும் பெயருடையவருமான மேற்படி மதகுருவிடம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் செய்த தீவிர விசாரணைகளின்போதே இவ்வாறு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் ஊடுருவியிருக்கும் புலிகள் இயக்கத்தினர் பற்றியும் அவர்கள் கிளைமோர்க் குண்டுகள், பெருஞ்சேதங்களை ஏற்படுத்தக்கூடிய பெரிய கலக்குண்டுகள் (Time Bomb), ரி 56 துப்பாக்கிகள், தற்கொலைக் கவசங்கள், குண்டுத் தாக்குதல்களுக்காக, குண்டுகள் பொருத்துவதற்கான மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள், வெடிகுண்டு இரசாயனங்கள் ஆகியவற்றை பதுக்கிவைத்திருந்த நிலையங்கள் பற்றியும் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு மேற்படி மதகுரு தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து மத்திய மலைநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பொலிஸ் தரப்பும், இராணுவத் தரப்பும் இணைந்து தீவிர தேடுதல்களை மேற்கொண்டுவருகின்றன. இதுவரையில் தேடுதல்களின் போது புலிகளால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள், தற்கொலைக் கவசங்கள் உட்பட பல நாசகாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி பாதுகாப்புத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களிலிருந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் இவ்வாறு நாசகார ஆயுதங்கள், குண்டுகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதக்களஞ்சியம் திகன அம்பகொட்டே பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.

புலனாய்வுப் பிரிவினரின் கவனம் முழுவதும் நுவரெலியா, ஹட்டன்,தலவாக்கலை போன்ற முக்கிய நகரப் பகுதிகளில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலேயே இருப்பதாலேயே அந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவினர் கவனம் செலுத்தாத பிரதேசமும், சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தாரும் வாழும் பிரதேசமும் ஆகிய திகன அம்பேகொட்டேப் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கிவைப்பதற்கான களஞ்சிய நிலையத்தை இரகசியமாக அமைத்துள்ளதாக மேலும் புலனாய்வுப்பிரிவுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கைதுசெய்யப்பட்ட மதகுருவிடமிருந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் பெற்றுள்ள தகவல்களுக்கேற்ப இந்த மதகுரு தன்னிடம் இருக்கும் வேன் வாகனத்தில் இதுவரையில் ஆயிரம் கிலோகிராமுக்கு மேற்பட்ட வெடிகுண்டுப் பொருட்களை நுவரெலியா, தலவாக்கல, கண்டி, மாத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் கிளிநொச்சிக்குச் சென்று புலிகள் இயக்க முகாம்களில் யுத்தப்பயிற்சிபெற்றுத் திரும்பிய நூற்றுக்கும் அதிகமான மத்திய மலைநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போது அப்பகுதிகளில் இருப்பதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் அப்பிரதேசங்களில் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்துக்கொண்டே தேவைப்படும் வேளைகளில் புலிகளின் தாக்குதல்களுக்கான உதவி ஒத்தாசைகளைச் செய்துவருவதாகவும் மேலும் புலனாய்வுப்பிரிவு கூறியுள்ளது. எவ்வாறாயினும் இவர்களில் நான்கு இளைஞர்கள் புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தேடுதல்களில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக காந்தி எனப்படும் நபர் செயற்பட்டுவருவதாக கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலும் இந்தக்குழுவினர் புலிகள் இயக்கத்துடன் வைத்திருந்த தொடர்புகள் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேடுதலை மேற்கொண்ட புலனாய்வுப்பிரிவினர் மேற்படி புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்த பாடசாலை அதிபர் ஒருவரையும், உபஅதிபரையும் அண்மையில் கைதுசெய்துள்ளனர். மேலும், புலனாய்வுப் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அம்பகொட்டே பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில், இரண்டு புலிகள் இயக்கத்தினர் சயனைற் உட்கொண்டதாகவும் அவர்கள் தற்போது கண்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே கொத்மலைப் பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் சயனைற் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிலநாட்களின் முன்னர் கண்டி கட்டுகஸ்தோட்டை புகையிரதப் பாலத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் பரவலாகப் புலிகள் இயக்கத்தினரால் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதால் கண்டியில் அம்பகொட்டே பகுதியில் புலிகள் இரகசியமாக ஆயுதக்களஞ்சிய நிலையம் ஒன்றை அமைத்துள்ளது போலவே மாத்தளை, நுவரெலியா, தலவாக்கலை ஆகிய பிரதேசங்களிலும் புலிகளின் ஆயுதக்களஞ்சியங்கள் இருக்கலாம் என புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரின் ஊடுருவல்கள் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னரே திகன தமிழ் பாடசாலை அருகில் திகன அழத்வத்த பகுதியைச்சேர்ந்த பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவின் பயிற்சிகளுக்குப் பொறுப்பான பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமாகிய உபுல் செனவிரத்ன கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆயினும் இந்தப் படுகொலைபற்றி விசாரணைகளில் இதுவரை முக்கிய தகவல் எதனையும் பெறமுடியவில்லை. மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரின் ஊடுருவலைத் தொடர்ந்து இதுவரையில் 12 சந்தேகநபர்கள் நுவரெலியா, கந்தப்பளை, திகன, பத்தன ஆகிய பிரதேசங்களில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவ்வூர்களில் வசிப்பவர்களே ஆவர். கடந்த நாட்களில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து புலிகள் இயக்கத்தினர் அமைச்சர் ரி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அழுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, சி.பி.ரத்நாயக்க, நவின் திசாநாயக்க, நுவரெலியா ஜே.வி.பி. தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன், ஈ.பி.டி.பி. பத்தன பிரதேச பிரமுகர் கந்தசாமி ஆகியோரை மலைநாட்டுப் பிரதேசங்களில் வைத்துக் கொலைசெய்யத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

லங்காதீப: 25/05/08

No comments: