அயர்லாந்து அமைதி முயற்சிதரும் பாடங்களும், சிறீலங்கா இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் என்ற தலைப்பில் அயர்லாந்தில் பொது கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.
அயர்லாந்தின் அரசியல் தீர்வுக்கு வித்திட்ட பெரியவெள்ளி ஒப்பந்தம் செய்யப்பட்டு 10 வருடங்கள் நிறைவை முன்னிட்டு, சிறீலங்கா அமைதி முயற்சிக்கான அயர்லாந்துப் பேரவை, மற்றும் டப்ளின் ட்றினிற்றி கல்லூரி என்பன இந்த மாநாட்டை ஒழுங்கு செய்திருந்தன.
டப்ளின் ட்றினிற்றி கல்லூரியின் வோல்ரன் அரங்கில் கடந்த 20ஆம், 21ஆம் (20-21.05.2008) நாள்களில் இந்த கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.
பேராசிரியர் லிண்டா ஹோகன் (Prof. Linda Hogan) தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அயர்லாந்து, மற்றும் பாஸ்க் இனப்பிரச்சினைகளில் அனுசரணையாளராகப் பணியாற்றியிருந்த அருட்தந்தை அலெக் றீய்ட் (Fr. Alec Ried) பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்டு அயர்லாந்து பேச்சுவார்த்தையின் அனுபவங்கள் பற்றிப் பேசினார்.
தமிழ், சிங்கள சமூகங்களில் இருந்து வெண்புறா அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி, மற்றும் ஹிரு குழுவின் ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான றோஹித பாஸன அபயவர்த்தன ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
போர்ச்சூழல் நிறைந்த வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பில் மருத்துவர் மூர்த்தியும், தமிழ் எதிர்ப்பும், சிங்கள சமூகம் மற்றும் இனப்பிரச்சினையில் அரசியல் போக்கு என்ற தலைப்பில் றோஹிதவும் பேசினர்.
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் எந்த வகையில் பங்காற்ற முடியும் என்ற தலைப்பில் ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுர்கென் கிளிம்கே (Jurgen Klimke) உரையாற்றியிருந்தார்.
அயர்லாந்து அமைச்சர் மார்ட்டின் மன்சேர்க் (Martin Mansergh), அனைத்துலக அமைதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சோன் ஓ. பொயிலி (Sean O’Boyley), தொழிற்கட்சியின் மூத்த ஆலோசகர் மார்க் கறெட் (Mark Garrett), புறொன்ட் லைனின் ஒருங்கிணைப்பாளரும், ஆய்வாளருமான கெயிற்றியோனா றைஸ் (Caitriona Rice) மற்றும் அயர்லாந்து போராளிகள் அமைப்பின் அரசியல் பிரிவான சின்பெயினின் (Shin Fein) உறுப்பினரும், 18 வருடங்கள் சிறையில் இருந்தவருமான றேமண்ட் மக்காட்னி (Raymond McCartney) ஆகியோரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர்.
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தவும், அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிவகைகள் பற்றியும் ஆராயும் வகையிலும் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டதாக ஏற்பாட்டு அமைப்புகள் தெரிவித்தன.
இந்த கருத்தரங்கு தொடர்பாக வெண்புறா அமைப்பின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி ஐரோப்பிய தொலைக்காட்சிக்கு கூறிய கருத்துக்கள்:
அயர்லாந்து ஒப்பந்தத்தை முன்மாதியாகக்கொண்டு இலங்கையில் எப்படி சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்பது பற்றி அங்கு ஆராயப்பட்டது.
அதில் எனக்கு பேசுவதற்கு தரப்பட்ட தலைப்பு, போர்ச்சூழலில் வடக்கு கிழக்கில் உள்ள நிலமை.
இந்த தலைப்பின் கீழ், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், மனிதாபிமானப் பணிகள் இந்தப் பிரதேசத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் எனது பேச்சில் எடுத்து விளக்கினேன்.
அங்குள்ள நிலமைளை விளங்கப்படுத்தும்போது அவர்கள் ஆச்சரியத்துடன், கவலைப்பட்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முதல் நாள் நூறு பேர் வரையிலும், மறுநாள் கணிசமான அளவு மக்களும் கலந்து கொண்டனர்.
இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர் அயர்லாந்து பேச்சுக்கு வித்திட்ட மதகுரு ஒருவர்.
அவர் தள்ளாத அகவையுடைய மூதாளராக இருந்தும், மருத்துமனையில் இருந்து அங்கு வந்து நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அனைத்துலக ரீதியாக இலங்கையின் நிலை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சமாதானத்தை ஏற்படுத்த ஏனைய நாடுகள் எவ்வாறு உதவலாம் என்பது உட்பட பல விடயங்கள் இந்த கருத்தரங்கில் ஆராயப்பட்டன.
இவ்வாறு மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment