Sunday, 18 May 2008

அரசாங்கத்தில் இணைவதை விட வயலில் வேலை செய்யலாம்--எஸ்.பி.திசாநாயக்க

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட வயலில் வேலை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தொடர்பாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் சில ஊடகங்கள் எஸ்.பி. அரசாங்கத்தில் இணைய போவதாக புதுமையான செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும் எஸ்.பி திசாநாயக்க இந்த ஊகங்களை மறுத்துள்ளார், எஸ்.பி. இருந்தாற்போல் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவது இந்த ஊகங்களுக்கு காரணமாகியது. இந்த தகவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து சென்றிருக்குமா எனவும் சில ஊடகங்கள் சந்தேகம் கொண்டன.


எது எப்படியிருந்த போதும் இது குறித்து எஸ்;.பி திசாநாயக்கவிடம் கேட்ட போது, இந்த செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்தார். அரசியலை தாண்டிய நட்பு காரணமாக ஜனாதிபதியுடன் தான் உரையாடுவதாகவும் இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கான காரணம், கள்ளவாக்கு, வாக்குசாவடிகளில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியினர் விரட்;ட பட்டமை போன்றவையாகும், எனினும் தேர்தல் பிரசார பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருந்தால் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும் எனவும் அவர் கூறினார்.


கள்ள வாக்கு போடபடாமல் இருந்திருந்தால், திருகோணமலையில் போன்றே அம்பாறையிலும் ஐக்கிய தேசிய கட்சியே வெற்றிபெற்றிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் தான் ஒருபோதும் இணைய போவதில்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் வீதியில் இறங்கி செல்ல முடியாதுள்ளதாகவும் எஸ்.பி.தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இணைவதை விட வயலில் வேலை செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார் அத்துடன் தான் சிறையில் இருந்த போது, தனக்கா பூஜைகளை நடத்தி, கண்ணீர் சிந்திய ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களை நடு தெருவில் விட்டு, எங்கும் செல்ல போவதில்லை எனவும் அவர் கூறினார்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: