கிழக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வந்திருந்த ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அவர்கள் 15 வாக்குச்சாவடிகளுக்கு மாத்திரமே சென்றிருந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும் பெரும்பாலானவற்றுக்குக் கூட அவர்கள் செல்லவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
பாஷை கூடத் தெரியாத ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தேர்தலைக் கண்காணிக்க அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் கூடத் தெரியாது. அவர்கள் எவ்வாறு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தேர்தல் வன்முறைகளைச் சரியாகக் கண்காணித்திருக்க முடியுமென தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்துக்குச் சென்றவர் என்ற ரீதியில் அங்கு பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை நான் அறிவேன், திருக்கோவில் பகுதியில் தமிழ் வாக்காளர்கள் பிள்ளையான் குழுவினரால் அவர்களின் முகாம்களுக்குக் கடத்திச்செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர் என அவர் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
“ஜனாதிபதி எனது பொக்கற்றில் இருக்கின்றார். நான்சொல்வதையே அவர் செய்வார். எனக்கு எதிராக நீங்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என பிள்ளையான் திருக்கோவில் பகுதி மக்களிடம் கூறியிருந்தார்” என்று இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டார்.
அம்பாறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு. ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக அரசாங்கம் தம்மீது வீண்பழி சுமத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேலும் கூறினார்.
No comments:
Post a Comment