அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கக் கோரி தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் மேற்கொள்ளவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பான தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
அரசாங்கப் பணியாளர்களின் சம்பளங்களைக் குறைந்தது 5000 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமெனக் கோரி ஜே.வி.பி.யின் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி நாடளாவியரீதியில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜொன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தனர்.
பொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப சம்பளங்களை அதிகரிக்காமல் அரசாங்கம் ஏமாற்றிவருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா, 7,500 ரூபாவால் சம்பளங்கள் அதிகரிக்கப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டில் தாம் இருக்கின்றபோதும், குறைந்தது 5,000 ரூபா அதிகரிப்பாவது வழங்கப்படவேண்டும் என்பதற்காக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்போவதாகக் கூறியுள்ளார்.
சம்பளங்களை அதிகரிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் மக்களை ஒன்றுதிரட்டி பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதரவான 400 தொழிற்சங்கங்கள் இணைந்துகொள்ளும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா மேலும் கூறினார்.
அத்துடன், மோதல்களை நிறுத்துவதற்காகவே எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, யுத்தத்தைக் காரணம்காட்டி மக்களை பாரிய நெருக்கடிக்கில் அரசாங்கம் தள்ளியிருப்பதாகக் கூறினார்.
பிரபாகரனைக் கொல்லாமல் அவரின் படத்துக்குத் தூபமிட்டு மோதல் என்ற பெயரில் அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 366 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பு தமது சங்கம் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் அன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க மாட்டார்கள் எனவும் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment