Sunday, 6 July 2008

இந்தியாவுக்கு எதிரான மகிந்தவின் மறைமுகப்போர்: பின்னணியில் நடப்பது என்ன?

இந்திய உயர்மட்டக்குழுவினர் மூவர் சிறிலங்கா சென்று சார்க் உச்சி மாநாடு தொடர்பாக விதித்துச் சென்றுள்ள நிபந்தனைகளால் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்திய மத்திய அரசுக்கு எதிராக மறைமுகப்போரில் ஈடுபட்டு வருகிறார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

அண்மையில் சிறிலங்காவுக்குச் சென்ற இந்திய உயர்மட்டக்குழு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பு விபரம் பற்றி ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தது. அந்த முடிவுக்கு அரசு தலைவர் மகிந்த ராஜபக்சவும் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், பயணத்தினை முடித்துக்கொண்டு இந்தியா சென்ற குழுவினர் அங்கு சில ஊடகங்களுக்கு சந்திப்பு தொடர்பான சில விடயங்களை கசிய விட்டிருந்தது.

சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் வருவது தொடர்பாக சிறிலங்காவுக்கு இந்தியா விதித்திருந்த நிபந்தனைகளால் சீற்றமடைந்திருந்த மகிந்த, இந்திய உயர் மட்டக்குழுவினரின் இந்த - நம்பிக்கையை குலைத்த - போக்கினால் மேலும் சினமடைந்தார்.

இந்தியாவுக்கு தக்க பாடம் புகட்ட தீர்மானித்த மகிந்த தனது அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய உயர் மட்டக்குழுவினருடனான தனது சந்திப்பு குறித்து சகல விடயங்களையும் வெளியிட்டார்.

இந்திய மத்திய அரசின் இருப்புக்கு வேட்டு வைக்கும் விதமாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் போருக்கு இந்தியா சகல இராணுவ உதவிகளையும் தருவதாக உறுதியளித்துள்ளது என்ற கருத்தையும் மகிந்த வெளியிட்டிருந்தார்.

மூடிய அறைக்குள் நடைபெற்ற சந்திப்பு தொடர்பான விபரங்களை அப்படியே வெளியிட்ட மகிந்தவின் செயலால் குழப்பமடைந்த இந்திய உயர்மட்டக்குழுவின் தலைவரும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை ஆலோசகருமான எம்.கே.நாராயணன், சிறிலங்காவுக்கு ஒருபோதும் இந்தியா இராணுவ உதவியை வழங்காது என்று அறிக்கை விடுத்திருந்தார்.

அது ஊடகங்களுக்கான அறிக்கையாக இருந்தபோதும், உண்மையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்காக வெளியிடப்பட்ட பதிலறிக்கையாகவே கருதப்பட்டது.

பதிலறிக்கையால் ஊடகங்களைச் சமாளித்த போதும் மகிந்தவின் இச்செயற்பாட்டை இந்திய அரசுக்கு எதிரான ஒரு செயலாகவே எம்.கே.நாராயணன் நோக்கினார்.

மகிந்த சீற்றமடைந்துள்ள விடயமான, கொழும்புக்கு இந்தியப் படைகள் வரும் விவகாரத்தின் ஊடாகவே மகிந்தவுக்கு பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது, சார்க் உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் சிறிலங்கா வான்படையின் எந்த வானூர்தியும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து வெளியேறக்கூடாது என்று சிறிலங்கா அரசுக்கு கடுமையான அறிவிப்பொன்றை அனுப்பியிருக்கிறது. அத்துடன், அக்காலப்பகுதியில் இந்திய வான்படையே அனைத்து பறப்புக்களையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் ஒரு கட்டமாக தனது இரண்டு வானூர்திகளை இந்தியா கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது.

கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்குச் சென்று சேர்ந்துள்ள வானூர்திகளே சார்க உச்சி மாநாட்டு பிரமுகர்களுக்கான போக்குவரத்துக்களை மேற்கொள்ளும் என்றும் இந்தியாவால் சிறிலங்காவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, சிறிலங்கா அரசுக்கும் இந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும் இடையில் நடைபெறும் இந்த மறைமுகப்போரை மிக உன்னிப்பாக கவனித்து வரும் பிரதான எதிர்க்கட்சியாக பாரதீய ஜனதா கட்சி, தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான தனது திட்டங்களை தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாகியுள்ளது.

சென்னையில் இது தொடர்பாக அண்மையில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் இரகசிய குழுக்கூட்டத்தின் இறுதியில் இரு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1) தமிழின அழிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிராக ஈழத்தமிழர்களை வலுப்படுத்துவது.

2) 13 ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு அப்பால் - போதிய அதிகாரங்களுடன் கூடிய சம்ஸ்டி ஆட்சிமுறை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை ஆதரிப்பது.

இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவித்தன.

1 comment:

ttpian said...

hereafter,I will not trust India!
India is the villain for the tamil community!
Indian are the enemies of Tamil community!