Friday, 18 July 2008

தொடர்ந்தும் 10 வருடங்கள் ஆட்சியிலிருக்க ஜனாதிபதி முயற்சி- அநுரகுமார திஸ்ஸாநாயக்க

தொடர்ந்தும் 10 வருடங்கள் ஆட்சியில் இருப்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டங்களை ஜனாதிபதி தற்பொழுதே முன்னெடுக்க ஆரம்பித்திருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு கட்டமாவேதான் மாகாண சபைகளைக் கலைத்து அங்கு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறினார்.

2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று 4 ஆண்டுகள் பூர்த்தியடையவிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அநுரகுமார திஸ்ஸாநாயக்க, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மேலும் 6 வருடங்கள் பதவிவகிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டே மாகாணசபைகளை இரண்டு இரண்டாகக் கலைத்து அவற்றில் வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், எனினும், கிழக்கு மாகாணசபையில் வெற்றிபெற்றதைப்போன்று அரசாங்கத்தால் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெற்றிபெறமுடியாதெனவும் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கூறினார்.

தொடர்ந்தும் பதவியிலிருக்க விரும்பும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது தனது மகனை அரசியலில் இறக்கியிருப்பதுடன், 10 வருடங்கள் பதவியிலிருந்து தான் ஓய்வுபெறும்போது மகனைப் உயர்பதவியில் அமர்த்துவதற்கு முயற்சிகளை எடுத்திருப்பதாகவும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்களில் வாக்குமோசடிகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது- ஐக்கிய தேசியக் கட்சி

அடுத்த மாதம் 23ஆம் திகதி நடைபெறவிருக்கும் வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் வாக்குமோசடிகளில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மாகாணங்களிலுள்ள பொலிஸாரை அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படவைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக சில பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுவருவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாணசபை முதல்வர் வேட்பாளர் மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கின்றபோதும், அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், ஜானக பெரேராவுக்கு ஏதாவது நடக்கும்வரை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

No comments: