வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமைய மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கிய 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் 13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
“மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது செயற்பட்டு வருகின்றார். பெரும்பாலான மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையை மறந்திருக்கும் ஜனாதிபதி, தற்பொழுது தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதிராகச் செயற்படுகிறார். ஒற்றையாட்சி மற்றும் இறைமை தொடர்பாக மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அவர் செயற்படுகிறார். தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கிலேயே அவர் இவ்வாறு செயற்படுகிறார்” என அநுரகுமார திஸ்ஸாநாயக்க கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளையும், பயங்கரவாதத்தையும் இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் இராணுவத்தினர் முழுமூச்சுடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில் மோதல்களை அரசாங்கத்தால் இலகுவில் நிறுத்திவிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.
பிழையான உதாரணங்களை வழங்கி மக்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு வழங்கும் ஆதரவைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த அநுரகுமார திஸ்ஸாநாயக்க, மோதல் என்ற பெயரில் அமைச்சர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி அதிகரித்துச்செல்வதுடன், அரசாங்கம் மற்றும் அமைச்சுக்கள் ஊழல்களை ஊக்குவிப்பதுடன், பொதுமக்களின் பணத்தை வீண்செலவுசெய்து வருவதாகத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் கொள்கைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைக்கு ஆரம்பம் முதல் எதிர்ப்புத் தெரிவித்து வரும் கட்சியாக தமது கட்சி அமைந்திருப்பதாகவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க மேலும் கூறினார்.

No comments:
Post a Comment