Monday, 21 July 2008

கச்சதீவு சிங்களவர்களுக்கே சொந்தமானது-- என்கிறது ஹெல உறுமய

கச்சதீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் கருத்தானது தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டதாகும்.


இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் மத்திய குழு உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.


கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. அதனை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி கச்சதீவை மீளப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் கருத்துக் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க மேலும் கூறியதாவது, எமது கடல் எல்லைக்கு இந்திய மீனவர்கள் வந்தால் கடற்படையினர் கைது செய்வார்கள். அதேபோலவே இந்திய கடல் எல்லைக்கு எமது மீனவர்கள் சென்றால் அவர்கள் கைது செய்வார்கள்.

இது தான் சர்வதேச சட்டமாகும். ஆனால் எமது கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதோடு தாக்குதலையும் மேற்கொள்வதாகவும் அண்மைக் காலமாக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலுள்ள விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்புக்களே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன.

இந்திய மீனவர்களின் மரணங்களுக்கு பின்னணியில் புலிகளே உள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே தற்போது நட்புறவு இறுக்கமடைந்து வருகிறது. அதேபோல் தமிழ் நாடும் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்குகிறது.


இந்த உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்காகவே தமிழ் நாட்டிலுள்ள புலிகளுக்கு சார்பான அமைப்புக்கள் அம் மாநில அரசுக்கு மீனவப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி அழுத்தம் கொடுக்கின்றன.


இதன் காரணமாகவே தமிழ் நாட்டு முதலமைச்சர் மு. கருணாநிதி தமிழ் மக்களையும் மீனவர்களையும் சந்தோஷப்படுத்துவதற்காக கச்சதீவை மீண்டும் இந்தியா பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டுள்ளார். எனவே இவ்விடயம் பெரிதுபடுத்தப்பட வேண்டியதொன்றல்ல. அதேவேளை கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது. எனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை.

No comments: