தேர்தல் நடத்தப்படவுள்ள வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினர் 15 முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 15 முகாம்களின் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த 500 பேர் ஆயுதங்களை கொண்டுள்ளதாகவும் சேனபுர என்ற இடத்தில் உள்ள முகாமில் மாத்திரம் ஆயுதம்தாங்கிய 150 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது, பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் தமிழ் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதுடன் தேர்தலுக்கு பின்னர் முஸ்லீம் பிரதேச மக்களை தாக்கியதுடன் முஸ்லீம் பிரதேச வர்த்தகர்கள் உட்பட பலரை கொலை செய்துள்ளனர்.
இதன் காரணமாக மோதல்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டிய நிலையேற்பட்டது. இந்த நிலையில் பொலன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினர் 15 முகாம்களை கீழ் வரும் பிரதேசங்களில் அமைத்துளளனர்.
சேனபுர, வெலிகந்த கரபொல, முத்துகல, சந்துன்பிட்டி, மன்னம்பிட்டி, உனாவௌ, குடாபொக்குண, மதுரங்கல,கொம்மிடியாமடு, கல்கந்த, புனானி, ரிதிதென்ன, மியன்குளம் ஆகிய இடங்களில் பிள்ளையான் குழுவினர் தமது முகாம்களை அமைத்துள்ளதுடன் இவற்றில் ஆயுதம் தரித்த உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில முகாம்கள் பாடசாலைகளுக்கு எதிரிலும், காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சமீபமாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment