Tuesday, 15 July 2008

29 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா இராணுவப் பயிற்சி: சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

இந்தியா 29,000ற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியிருப்பதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இராஜதந்திர சட்டங்களை மதிக்காமல் 1984ஆம் ஆண்டு பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிட்டது எனவும் கூறியுள்ளார்.

அப்பொழுது 15ஆயிரம் பேரை மாத்திரம் கொண்டிருந்த இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தக் காலப் பகுதியில் பல தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை எடுப்பதற்கு இந்தியா தூண்டுகோலாக இருந்தது எனத் தெரிவித்தார்.

“வன்னியைப் கைப்பற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஜயசிக்குரு மற்றும் ரிவிரச இராணுவ நடவடிக்கைகளின் போது 12 ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்ததுடன், 18 ஆயிரம் இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர். போதியளவு இராணுவப் பலம் இன்மையாலேயே இந்த இழப்பு ஏற்பட்டிருந்தது” என அமைச்சர் குறிப்பிட்டார்.

வெற்றிகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தம் சந்திரிகா-ரணில் ஒப்பந்தம் எனவும் சம்பிக்க ரணவக்க கூறினார். “சமாதான ஒப்பந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் விமானங்கள், ஏவுகணைகள், போர்த் தளபாடங்கள் போன்றவற்றை நாட்டுக்கு எடுத்துவந்தனர்” என அமைச்சர் ஊடகங்களிடம் கூறினார்.

மாவிலாறு மோதல்களை ஆரம்பித்த இராணுவத்தினர், கிழக்கிலிருந்து முழுமையாக விடுதலைப் புலிகளை விரட்டியடித்து ஏனைய நாட்டு இராணுவத்தினருக்கு ஒரு பாடத்தைப் புகட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல்களில் இராணுவத்தினர் ஈட்டிவரும் வெற்றிகளை அறிக்கையிட விரும்பாத சில ஆங்கில ஊடகங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அர்ப்பணிப்புடன் செயற்படும் மனிதர் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பே உலகத்தில் சிறந்த போராளிகள் அமைப்பு எனவும் சித்தரித்து வருவதாக சம்பிக்க ரணவக்க கூறினார்.

ஊடக சுதந்திரமோ மனித உரிமைகளோ மீறப்படவில்லை

கடந்த 1989ஆம் ஆண்டு இடம்பெற்றதைப் போன்று தற்பொழுது மனித உரிமை மீறல்களோ, ஊடக சுதந்திர மீறல் சம்பவங்களோ இடம்பெறுவதில்லையென சுற்றாடல் வளத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

“தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த வருடத்தில் 21 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக இணையத்தளமொன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதில் 6 பேர் இலங்கையர்கள் எனவும், இதில் இருவர் புலிகளின் குரல் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஊடகவியலாளர்களா? இவ்வாறானதொரு நிலைப்பாடே வெளிநாடுகளுக்குக் காண்பிக்கப்படுகிறது” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியிருந்தார்.

No comments: