சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பை முன்னிட்டு கொம்பனி வீதி ரயில்கடவையோரம் அமைந்திருக்கும் சட்டரீதியற்ற கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாகவும், அப்பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ இராணுவ மற்றும் விமானப் படையினரின் தலைமையலுவலகங்கள், பொலிஸ் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சுமார் 200 சட்டரீதியற்ற குடியிருப்புகளே இவ்வாறு அகற்றப்படவிருக்கின்றன” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கொம்பனித்தெரு, ‘க்ளென்னீ பெசேஜ்’ பகுதியில் அமைந்துள்ள சட்டரீதியற்ற குடியிருப்புக்கள் மற்றும் வியாபார நிலையங்களில் தங்கியிருப்போரை ஜூலை 10 ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறுகோரி கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்தப் பகுதியிலிருந்து, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு 7 நாட்களுக்குள் சகல சட்டரீதியற்ற கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும்” என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, இடம்பெயரவுள்ள குடும்பங்களுக்கான மாற்று குடியிருப்பு ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 1,000 புதிய வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமொன்று தெமட்டகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்;டுள்ளதாகவும், கொம்பனி வீதியிலிருந்து இடம்பெயர்வோர் அவற்றை நிரந்தரமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் டாக்டர் பிரதீப் ரம்னுஜான் தெரிவித்துள்ளார். அத்துடன், இவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொள்ளும்வகையில் மேலும் இரண்டு தெரிவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment