சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள கலகேவில் இன்று முற்பகல் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கதிர்காமம் - புத்தள வீதியில் கலகேவில் உள்ள 149 ஆவது மைல் கல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கதிர்காமத்திலிருந்து புத்தள நோக்கிச் சென்றுகொண்டிருந்த மொனறாகல டிப்போவுக்குச் சொந்தமான என்.ஏ. 3655 இலக்க பேருந்தின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளாதாவது:
சிறிலங்கா அரச போக்குவரத்து துறைக்குரிய பயணிகள் பேருந்தே புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. மூவரடங்கிய புலிகளின் குழுவே வீதிக்கு குறுக்கே நின்று பேருந்தின் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பேருந்தின் சாரதி காயமடைந்தபோதும் அவர் சுதாகரித்துக்கொண்டு பேருந்தை அங்கிருந்து வேகமாக கதிர்காமம் மருத்துவமனை நோக்கி நகர்த்தினார் என்று தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் மூவர் பேருந்துக்குள்ளேயே கொல்லப்பட்டனர். 26 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த ஒருவர் பின்னர் உயிரிழந்தார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.
கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் காயமடைந்தவர்கள் கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வரின் நிலை மிகவும் கவைலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவத்தையடுத்து புத்தள கதிர்காமம் வீதி மூடப்பட்டு அங்கு பேரும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் நிறுவப்பட்ட அம்பாந்தோட்டை ஓருங்கிணைப்பு படைத் தலைமையகக் கட்டளை அதிகாரி கேணல் தேவேந்திர பெரேரா தலைமையிலான படையினரே இத்தேடுதலை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இத்தேடுதல் காரணமாக புத்தள - கதிர்காமம் வீதியை பயணிகள் போக்குவரத்திற்கு தவிர்க்குமாறு படையினர் தெரிவித்துள்ளனர்.





No comments:
Post a Comment