* அவர்களை ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளியது யார்?; பீலிக்ஸ் பெரேரா கேள்வி தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோதும் கண்டியை சேர்ந்த கொப்பேகடுவவை யாழ்ப்பாணத் தொகுதியில் வெற்றிபெற வைத்தவர்கள் தமிழ் மக்கள். அப்படிப்பட்டவர்களை ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளியது யார் என்பதை ஐ.தே.க. வும் ஜே.வி.பி.யும் எண்ணிப் பார்க்க வேண்டுமென அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இலங்கையில் தமிழ் மக்கள் முதலில் ஆயுதம் ஏந்தவில்லை. முதலில் ஆயுத கலாசாரத்தை துவக்கியவர்கள் ஜே.வி.பி.யினர். தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளே அவர்களை ஆயுதம் ஏந்தவைத்தது.
1983 இல் நடந்த தமிழருக்கெதிரான கலவரம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பலமடைய வைத்தது. அதனால் நாம் இன்று சிரமங்களை அனுபவிக்கின்றோம்.
ஜே.வி.பி. எதைத்தான் ஒழுங்காக செய்துவிட்டது. இந்தியப் படை புலிகளை அழிக்க வந்தபோது இந்தியப் படையை வெளியேற்றியது. இந்தியப் பொருட்களுக்கு தடை விதித்தது. அதன் பலன்களை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமானால் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமானால் அவர்களை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்ய வேண்டும்.
இன்று ஜே.வி.பி.யிடம் ஐ.தே.க. வும் இணைந்துள்ளன. அரசுக்கு நெருக்கடியை கொடுக்க வேலை நிறுத்தத்தை மேற்கொள்கின்றனர். இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்க கோரியிருந்தால் அதனை ஏற்றுக்கொண்டிருக்கலாம் அல்லது காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு கேட்டிருந்தால் கூட ஏற்றுக்கொண்டிருக்கலாம். நாடு உள்ள தீர்க்கமான கட்டத்தில் இவர்கள் வெட்கமில்லாமல் 5 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்கிறார்கள்.
No comments:
Post a Comment