அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனையில் இன்று சிங்கள வியாபாரிகள் மூவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்ற இந்த வியாபாரிகள் மூவரும் கட்டில்களையும் அதற்குரிய மெத்தை விரிப்புகளையும் கல்முனையில் விற்பனை செய்யும் நோக்கில் சென்று கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கண்டி வெத்தேகமையைச் சேர்ந்த இந்திக ஜெயசேகர (வயது 22), வசந்த பிரேமகுமார (வயது 24), அசங்க நாமல் (வயது 22) ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
கல்முனை, உடையார் வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:25 மணியளவில் இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று கல்முனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் உடலங்கள் கல்முனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. சம்பவம் குறித்த விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நோக்கில் செல்லும் சிங்கள வியாபாரிகள் தொடர்ச்சியாக சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்ற போதும், இச்சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment