Thursday, 10 July 2008

நாமல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசி சேவை குறித்த தகவல்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், ஊடகவியலாளருமான நாமல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிக்குச் சென்ற அழைப்புக்கள் குறித்த தகவல்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு நீதிமன்றம், கையடக்கத் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

டயலொக் டெலிக்கொம் மற்றும் ரிகோ நிறுவனம் ஆகிய இரண்டுக்குமே கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேரட்ன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இரகசிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஊடகவியலாளர் நாமல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளிச்சென்ற மற்றும் உள்வந்த அழைப்புக்கள் குறித்து தகவல்களைப் பெறவேண்டியிருப்பதால் கையடக்கத் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களிடம் விபரங்களைக் கோருவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாமல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிகளின் விபரங்களை வழங்குமாறு, கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரி மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மூன்று தொலைபேசி இலக்கங்களை விசாரணையாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: