Thursday, 10 July 2008

வேலைநிறுத்தப் போராட்டம் தோல்வியென்கிறது அரசாங்கம்: 70 வீதம் வெற்றி என்கின்றன தொழிற்சங்கங்கள்

சம்பள உயர்வு கோரி எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இன்று வியாழக்கிழமை ஏற்பாடுசெய்திருந்த பொது வேலைநிறுத்தப்போராட்டம், தோல்வியடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற அதேநேரம், தமது போராட்டம் வெற்றியளித்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை எனவும், அரசாங்க நிறுவனங்கள் வழமைபோன்று இயங்குவதாகவும் பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போராட்டம் 70 வீதம் வெற்றியளித்துள்ளது-லால் காந்த

இருப்பினும், இன்றைய வேலைநிறுத்தப் போராட்டம் 70 வீதம் வெற்றியளித்துள்ளதாக அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லால் காந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழிற்சங்கங்கள் நாளை சந்தித்து தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பொதுச்சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதாகவும், கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களிலிருந்து 80 சதவீதமான ஊழியர்கள் கடமைக்கு சமுகமளித்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் மின்சாரம் ஆகிய சேவைகள் வெற்றிகரமாக செயற்படுவதாகவும், இந்த துறையை சேர்ந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களும் சமுகமளித்திருந்தாகவும் நிறுவனத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, ரயில் சேவை வழமை போன்று இடம்பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் எந்தப் பாடசாலைகளும் மூடப்படவில்லையெனவும், பாடசாலைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் வழமையான சேவை இடம்பெறுவதுடன் தபால் சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் மீது தாக்குதல்

அத்துடன், சில இடங்களில் வேலைக்குச்சமுகமளித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிநிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்டி போதனா வைத்தியசாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத அம்பியுலன்ஸ் வண்டி சாரதிகள் சங்க உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லால் காந்த பதவி விலகுவாரா? – அமைச்சர் மஹிந்தானந்த

இதேவேளை, தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தேசிய தொழிற்சங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த விலகுவரா என அமைச்சர் மஹிதானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

வேலை நிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்தால் தனது பதவியை இராஜினமா செய்யப் போவதாக லால்காந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments: