Thursday, 10 July 2008

யேர்மன் - சிறிலங்கா "நேர்த்தியற்ற பேரம்" இரகசிய பேரம்: அம்பலப்படுத்துகிறது ஜேர்மன் சஞ்சிகை

ஜேர்மனியிலிருந்து வெளிவரும் Der Spiegel எனும் சஞ்சிகை தனது 23.06.2008 நாளிட்ட இதழில் ஜேர்மனிக்கும் சிறிலங்காவுக்கும் இடையே நடைபெற்ற இரகசிய பேரமொன்றை அம்பலப்படுத்தியுள்ளது.

"நேர்த்தியற்ற பேரம்" என்ற தலைப்பில் யேர்மனியில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக்கொண்ட இப்பிரபலமான சஞ்சிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் நுழைவதற்கு தேவையான எந்த விலையைக் கொடுக்கவும் ஜேர்மன் அரசு தயாராகவிருக்கின்றது.

எதிர்வரும் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புச் சபையில் ஒரு பிரதிநித்துவத்தை பெறுவதற்கான ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில், நியூயோர்க்கில் உள்ள ஜேர்மனிய நிரந்தரப்பிரதிநிதி கடந்த பெப்ரவரி மாதம் மிக இரகசியமான ஒப்பந்தமொன்றை சிறிலங்காவுடன் செய்துள்ளார்.

இந்த நேர்த்தியற்ற பேரம் தொடர்பில் தெரியவருவதாவது:

மே மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆலோசனைச் சபையில் மீண்டும் சிறிலங்கா தெரிவு செய்யப்படுவதற்கு ஜேர்மனி ஆதரவளிக்கும். அதேவேளை 2010 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனி பிரதிநிதித்துவம் பெற சிறிலங்கா அரசு ஆதரவு வழங்கும்.

இந்தப் பேரத்தில் சூடான விடயம் என்னவென்றால் மனித உரிமை மீறல்களுக்காக வருடக்கணக்காக சிறிலங்கா குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன் மார்ச்சில் மனித உரிமை கண்காணிப்பகம் தமிழர்கள், மனித உரிமைவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக 99 சம்பவங்களை பட்டியிலிட்டுள்ளது.

இச்சம்பவங்களில் அரச படையினர் வெளிப்படையாகவே தொடர்புபட்டிருந்தனர். உலக அரங்கைப் பொறுத்தவரை முதன்முதலாக ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த குழுவொன்று 2007 இல் 317 பேர் காணாமல் போனதாக உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனியின் இந்தப்பேரம் குறித்து ஜேர்மன் வெளிநாட்டமைச்சு கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்தபோதும் இப்பேரம் எதற்கும் உதவவில்லை. ஏனெனில் சிறிலங்கா 21 ஆம் நாள் மே மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: