Saturday, 12 July 2008

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 306 சிங்கள மாணவர்கள் நியாயமற்ற செயலென்கிறார் தங்கேஸ்வரி எம்.பி.

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் 1,120 மாணவர்களில் 306 சிங்கள மாணவர்கள் இணைக்கப்படுவது எந்த வகையில் நியாயமான செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள, முஸ்லிம் மாணவர்களை இணைப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகத்திற்கு 1120 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இவர்களில் தமிழ் மாணவர்கள் 358 பேரும் சிங்கள மாணவர்கள் 306 பேரும் முஸ்லிம் மாணவர்கள் 79 பேரும் உள்ளடக்கப்படுகின்றனர்.

தமிழர்களைப் பெரும்பான்மையாகவும் அடுத்த பெரும்பான்மையாக முஸ்லிம்களையும் கொண்ட கிழக்கு மாகாணத்தில் சிங்கள மாணவர்களுக்கு எவ்வாறு இவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டது? இது அநீதியான செயல்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு 1,203 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுகின்றனர். இவர்களில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் 261 பேர் அடங்குகின்றனர்.

மூவின மாணவர்களும் கலந்து கற்பது நல்ல நடவடிக்கை. ஆனால், நாட்டில் அவ்வாறான சூழ்நிலை இல்லை. வடக்கில் யுத்தம் இடம்பெறுகிறது. அதேபோல் கிழக்கிலும் யுத்தம் இடம்பெறுகிறது. இல்வாறான நிலையில் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் எவ்வாறு யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்க முடியும்.

தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்கள். கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவருக்கு அனுமதியில்லை. ரஜரட்டைப் பல்கலைக்கழகத்திலும் இதே நிலைதான். ஏன் இங்கு தமிழ் மாணவர்களை அனுமதிக்க முடியாது?

மகரகம தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களை சொந்த இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது. மருதானை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த 6 தமிழ் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தென்பகுதி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நீக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், ஏ 9 பிரதான வீதி திறக்கப்பட வேண்டும். இவற்றை அரசு செய்தால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய ?ழ்நிலை ஏற்படும். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் உள்ளீர்ப்பில் இன சதவீதம் பேணப்பட வேண்டும். இதில் அரசும் உயர் கல்வி அமைச்சும் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

No comments: