கிழக்கில் கடந்த 1990 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 400 காவல்துறையினர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது, தேவையேற்பட்டால் மாத்திரமே கருணா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என அமைச்சர் கேஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட காவல்துறையினரின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் அண்மையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தியதுதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் சம்பந்தமான ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கருணா, போலி கடவூச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு சென்றமை தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுபாட்டாளரால் எதுவித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தெரிவித்த இந்த தகவல்களினால் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆச்சரியமடைந்தனர், அவர்கள் எழுப்பிய கேள்விகள் மூலம் அது தெரிந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா கிழக்கு மாகாண தலைவராக இருந்த போது அவரின் நேரடி நடவடிக்கையின் கீழ் 400 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
பிரித்தானியவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து சர்வதேச ஊடகம் ஒன்று கருணா வழங்கிய செவ்வியில், விடுதலைப்புலிகளின் உத்தரவின் பேரில் தனது நெறிப்படுத்தலில் 1990 ஆம் ஆண்டு இந்த 400 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதாக கருணா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment