Wednesday, 9 July 2008

இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருக்கு பதவி உயர்வு


ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி, சிறிலங்காவின் வெற்றிக்கு வழிசமைத்த சுழல் பந்துவீச்சாளரும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசை இரண்டாவது லெப்ரினனாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவி உயர்த்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்லறி படைப்பிரிவின் அதிகாரிகள் தரமற்ற சார்ஜன்ட் தகைமையை கொண்டிருந்த அஜந்த மென்டிஸ் தற்போது அதிகாரிகள் தரமுள்ள இரண்டாவது லெப்ரினனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆசியக்கோப்பையை வென்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணியை இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் சந்தித்துப் பாராட்டிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

சிறிலங்கா இராணுவ துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் (வயது 23) மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் முதன்முதலாக விளையாடியிருந்தார்.

பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகளை இவர் எடுத்து சிறிலங்கா அணியின் வெற்றிக்கு வழியமைத்ததுடன் ஆட்ட நாயகனாகவும் ஆட்டத்தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: