Wednesday, 9 July 2008

சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலளார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

சுயாதீன தொலைக்காட்சியின் இரண்டு பிராந்திய செய்தியாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஐந்து ஊடக அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சங்கம், முஸ்லிம் ஊடகப் பேரவை, தமிழ் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன கூட்டாக இணைந்து இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அரசாங்கக் கட்டுப்பாட்டு ஊடக நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளர்களான சுஜித் ஹேவாவிதாரண மற்றும் திலக் வீரசிங்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இவ்வாறான தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஊடக நிறுவனங்களின் அரசியல் கொள்கைகளைப் புறந்தள்ளி அனைத்து ஊடகவியலாளர்களையும் பாதுகாக்க வேண்டியது சகல அரசியல் கட்சிகளினதும் கடமையாகும்.

மேலும், அரசியல் கட்சிகளுக்கு பக்கச்சார்பாக செய்தி வெளியீடுவதனை தவிர்த்துக் கொள்வது ஊடகவியலாளர்களினதும் கடமையாகும்.

மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை இந்நாட்டு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேர்விட்டு இருப்பதாக அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்காது குறித்த ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments: