நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இணைந்து, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப 5000 ரூபா சம்பள உயர்வுகோரி ஏற்பாடு செய்துள்ள பொது வேலைநிறுத்தம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மேலும் பல தொழிற்சங்கங்களும், இதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஏற்கனவே வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்பொழுது ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களின் விரக்தியையும் கஷ்டத்தையும்; வெளிப்படுத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன, மத பேதமின்றி சகல தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், முன்னணி 5 ஊடக அமைப்புகள், 5 ஆசிரிய தொழிற்சங்க சம்மேளனங்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க ஒன்றியம் ஆகியனவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்போர் வேதனம் கோரிப் போராடுவது வாழ்வதற்கான உரிமையைப் போன்றே, மனித உரிமையுமாகும் எனக்குறிப்பிட்டுள்ள 5 ஊடக அமைப்புகள், உழைக்கும் மக்கள் அனைவரதும் பொதுக் கோரிக்கையை ஏற்று சம்பள உயர்வை வழங்க வேண்டும் என தாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, சுமார் 450 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நாளைய வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவருமான லால் காந்த தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, வேறு சில தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.
சுகாதாரத்துறை ஊழியர் சங்கம், இலங்கை விவசாயத்துறை ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கம், அரசாங்க சுவசேவா சங்கம், அகில இலங்கை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சுமார் எட்டு சங்கங்களின் தலைவர்கள் இதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும், அரசாங்கத்தை அசௌகரியத்துக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபடப் போவதில்லையெனவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தாம் நிராகரிப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.எந்தவொரு அரசியல் ரீதியான போராட்டங்களிலும் தம்மால் இணைந்து கொள்ள முடியாது எனவும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதாரத்துறை ஊழியர்கள் எவராவது நாளையதினம் வேலைக்குச் சமுகமளிக்கத்தவறினால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ள சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, வேலைக்குச்சமுகமளிக்கும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்துவோரைக் கைது செய்யுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பாடசாலைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்டுள்ள கல்வியமைச்சு, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்காவிட்டால், விடுமுறையின்றி பாடசாலைக்கு வரத்தவறியதாக கருதப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், வியாழக்கிழமை நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தப் போராட்டத்தைத் தடுக்கும்பொருட்டு கொழும்பில் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என பொய்யான கதைகளை அரசாங்கம் பரப்பி, படையினரைக் கொண்டு இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதுகுறித்து இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அரசியல் யாப்பின் 14 ஆவது பிரிவுக்கமைய தொழிலாளர்களின் உரிமைகள் எதனையும் அரசாங்கம் ரத்துச் செய்யவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போராட்டங்களை ஒடுக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்காதெனக் கூறியுள்ள அவர், எனினும் விடுதலைப் புலிகளுக்கு உதவும் வகையில் சட்டத்திற்கு முரணாக நடந்துகொள்ளுமிடத்து, அவற்றைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையாகுமெனவும்; கூறியுள்ளார்.

No comments:
Post a Comment