காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் வந்த தீவிரவாதி, இந்தியத் தூதரகத்திற்குள் நுழைய முயற்சித்தார்.
ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின.
இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. தூதரகம் உள்ள சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
போலீஸாரும், ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிர்ப் பலி உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒரு இந்திய வீரர் பலி:
குண்டுவெடிப்பில் தூதரகத்தின் சுற்றுச் சுவர் பலத்த சேதமடைந்தது. இறந்தவர்களில் ஒருவர் தூதரக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியத் தூதரகதத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தலிபான் அமைப்பு இதை மறுத்துள்ளது.
இந்தியா கண்டனம்:
காபூல் இந்தியத் தூதரகம் முன்பு நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இந்தியா கண்டனமும், கவலையும் தெரிவித்துள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவாதிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை செயலாளர், வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:
Post a Comment