சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவென ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள 48 நடைபாதை வர்த்தக நிலையங்கள் கோட்டை மாநகர சபையின் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் இன்று பெகோ இயந்திரங்கள் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளன.
இந்த வர்த்தக நிலையங்கள் 1992 ஆம் ஆண்டு கோட்டை மாநகர சபையின் முதலவராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சந்ரா சில்வாவினால் நிர்மாணித்து வழங்கப்பட்டன.
இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மாதாந்தம் வர்;த்தக நிலையத்திற்கான வரிப்பணத்தை மாநகர சபைக்கு செலுத்தி வருகிறனர். நேற்று பிரதேசத்திற்கு சென்ற இரண்டு அதிகாரிகள் தாம் நாளை கடைகளை அகற்ற போவதாகவும் இதனால் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு கூறியதாக வர்த்தக நிலையத்தை இழந்த சிறு வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வந்தவர்கள் யார் என அறியாத நிலையில் மாநகர சபையின் முதல்வரிடம் முறையிட்ட போது, உயர்மட்ட உத்தரவு காரணமாக தன்னால் எதுவும் செய்ய முடியாது என கூறியதாகவும் அந்த வியாபாரி கூறியுள்ளார்.
வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த சிலர் குடும்பங்களுடன் அந்த இடத்திலேயே வாழ்ந்து வந்த நிலையில் வர்த்தக நிலையம் அகற்றப்பட்டுள்ளதால், நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள கோட்டை மாநகர சபையின் தற்போதைய முதல்வர் காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் சந்ரா சில்வாவின் மனைவி என்பது குறிப்பிடதக்கது.
அரசாங்கத்தின் உயர் மட்ட உத்தரவின் பேரில் இந்த வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டதாக வெலிகடை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment