Wednesday, 2 July 2008

நாமலைத் தாக்கியவர்கள் பற்றி தகவல் தருபவருக்கு 5 மில்லியன் ரூபா: பத்திரிகை வெளியீட்டாளர்கள் அறிவிப்பு

ஊடகவியலாளரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் மான நாமல் பெரேராவை தாக்கியவர்கள் தொடர்பான விபரங்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் ரூபா பரிசு வழங்கப்படும் என்று இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பத்திரிகை வெளியீட்டாளர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இந்தத் தகவலை அவர்கள் வெளியிட்டனர்.
காலை 10.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட், தினக்குரல் பப்ளிகேசன்ஸ் பிறைவேட் லிமிட்டட், சுமதி பப்ளிகேசன்ஸ் லிமிட்டட், உதயன், சுடரொளி வெளியீட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


இவர்களுடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை ஆசியர் சங்கம் ஆகியனவும் இணைந்து இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தினர்.

பத்திரிகை வெளியீட்டாளர்கள் சார்பாக இங்கு தகவல் வெளியிட்ட எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் குமார் நடேசன், இலங்கையில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்பட்டுச் சட்டத்தின்முன் நிறுத்தப்படாத காரணத்தினால், ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீதான தாக்குதலை நடாத்தியவர்கள் தொடர்பான தகவல் தருபவர்களுக்கு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக 5 மில்லியன் ரூபா வெகுமானம் வழங்கத் தீர்மானித்திருப்பதாக கூறினார்.

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் நெறிமுறைகளுக்கு அமைவாக, நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக வழங்கப்படும் தகவல்கள் மற்றும் விபரங்கள் விசேட குறியீட்டு முறையில் இரகசியமாகப் பேணப்படும் என்றும் அவர் இங்கு அறிவித்தார்.

No comments: