நாட்டின் நிதி நெருக்கடி மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும், ஐ.தே.கட்சியும், ஜே.வி.பி.யும், அரசாங்கம் Standard Chartered வங்கியிடமிருந்து 2.56 வீத வட்டியுடன், 220 மில்லியன் டொலர் கடன்பெற முயற்சிப்பதானது நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என எச்சரித்துள்ளன.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கடன் எனக் கூறியே இந்தத் தொகை பெறப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இதற்கு முன்னரும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக எனக் கூறி HSBC வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெற்றதாகவும், ஆனால் அதனைக் கொண்டு எந்த அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கடன்கள் ஏற்கனவே பெறப்பட்ட கடன்களையும், அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
" இந்த நாடு கடன்களால் சூழப்பட்டிருக்கிறது. மேலதிக கடன்கள் நாட்டின் பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. ஏற்கனவே இலங்கை 400 பில்லியன் ரூபாய்கள் கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் புதிய கடன்களும் நாட்டை பாரிய நிதி நெருக்கடிக்கே இட்டுச் செல்லும்" என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இவ்வாறு அரசாங்கம் பெற்றுக்கொள்கின்ற கடன்களுக்கு எதிர்காலத்தில் தமது அரசாங்கம் பொறுப்பேற்காது என ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு முன்னர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும், ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, அரசாங்கம் தனது செலவினங்களை ஈடுசெய்வதற்காக வெளித் தரப்புகளிடமிருந்து கடன் பெறுவதாகவும், நாட்டு விவகாரங்கள் அறிவற்றவிதமாக கையாளப்படுவதன் காரணமாக அதற்கெதிராக பொது மக்கள் இறுதி முடிவெடுக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment