Saturday, 26 July 2008

சிறீலங்காவினால் 65 மில்லியன் ரூபா செலவில் லொபி குழு அமர்த்தப்பட்டுள்ளது

சிறிலங்கா அரசு மீது அனைத்துலக மட்டத்தில் கொண்டுவரப்படும் தடைகளை தடுப்பதற்காக பெரும் நிதி செலவில் சட்ட நிறுவனங்களை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அனைத்துலக மட்டத்தில் பெரும் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமைய பல நிறுவனங்களை அது பெரும் நிதி உதவிகளுடன் உருவாக்க முற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இதற்கான உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் சபை சிறிலங்கா அரசிற்கு எதிராக மேற்கொள்ளும் தீர்மானங்களை தடுப்பதற்காக இந்த நிறுவனத்துடன் 65 மில்லியன் ரூபாய்கள் செலவில் ஒரு வருட உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னவின் உத்தரவின் பேரில் அமெரிக்கத் தூதுவர் இதற்கான கேள்விப்பத்திரங்களை கோரியிருந்தார்.

பல நிறுவனங்கள் விண்ணப்பித்த போதும் பிஎச்எஃப்எஸ் (Brownstein Hyatt Farber Schreck, LLP - BHFS) எனப்படும் சட்ட நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பல செயற்திறன்மிக்க நிறுவனங்கள் உள்ள போதும் இந்த நிறுவனம் ஏன் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த திட்டத்திற்கான முதலாவது பணக்கொடுப்பனவாக 300,000 டொலர்களை அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதுவர் பேர்னாட் குணதிலக்க கடந்த மே மாதம் 21 ஆம் நாள் செலுத்தியிருந்தார். இது ஆறு மாதங்களுக்கான நிதியாகும். மிகுதி தொகையை ஜூலை மாத இறுதிப்பகுதியில் செலுத்தப்படவுள்ளது.

எனினும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களின் அடிப்படையிலேயே மிகுதி தொகை செலுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் காங்கிரஸ் சபை உறுப்பினர்களுடன் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கான சந்திப்புக்களை ஏற்படுத்துவது இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஒன்று. இதன் மூலம் சிறிலங்கா அரசு தொடர்பான ஒரு புரிந்துணர்வை அமெரிக்க அதிகாரிகளிடம் ஏற்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் மக்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ எதுவும் தெரிவிக்காது அரசு ஏன் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதனிடையே மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு நடவடிக்கைகள் எடுக்காது விட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என கடந்த வாரம் சிறிலங்காவுக்கு சென்றிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: